“வருங்கால முதல்வரே”.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்.. கூட்டணி ஆட்சி விவாதத்துக்கு இடையே பரபரப்பு!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையுமா என்ற விவாதம் வெடித்துள்ளது. பாஜக கூட்டணி ஆட்சியை நோக்கி கொக்கி போட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அதனை மறுத்திருந்தார். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை "வருங்கால முதல்வரே" எனக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. திமுக கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அதே கட்சிகளுடன் கூட்டணியை தொடர இருப்பதாகத் தெரிகிறது. விஜய் தலைமையிலான தவெக இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார். அமித் ஷா இவ்வாறு தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி இல்லை என உறுதியாகத் தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறவே இல்லை. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சியா?
இது அதிமுக - பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதுபற்றி பேசி இருந்தார். "கூட்டணியை பற்றி பேசியது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். எனவே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து, அந்த நேரத்தில், அமித் ஷா முடிவெடுப்பார். அது பற்றி என்னால் கருத்து கூற முடியாது." எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான தம்பிதுரை, "தமிழகத்தில் இதுவரை ஏதாவது கூட்டணி ஆட்சி அமைந்து இருக்கிறதா? தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை. வரும் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தனியாக தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது. கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்தில் திராவிட கட்சிகளில் இருந்தது கிடையாது. இருக்கப்போவதும் கிடையாது." என்றார்.
வருங்கால முதல்வரே
கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக - பாஜக இடையே சலசலப்புகள், மாற்றுக் கருத்துகள் நிலவி வரும் சூழலில், நயினார் நாகேந்திரனை "வருங்கால முதல்வரே" எனக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா. எஸ். செல்வகுமார் ஓட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில், "பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராகப் பொறுப்பேற்கும் வருங்கால முதல்வரே! வாழ்த்துகிறேன்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications