அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்கெனவே சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ள 13 பேருக்கு அதிமுக தலைமை மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அது போல் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

அது போல் இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுவரை மொத்தம் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். இதில் 17 பேர் பெண் வேட்பாளர்கள். 46 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் 13 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கொடுக்கவில்லை.
அந்த 13 பேர் யார் யார்?:
அவிநாசி- முன்னாள் சபாநாயகர் தனபால்
பாப்பிரெட்டிபட்டி- கோவிந்தசாமி
ஆரணி- சேவூர் ராமசந்திரன்
வானூர்- சக்கரபாணி
கள்ளக்குறிச்சி- செந்தில்குமார்
ஏற்காடு- சித்ரா
சங்கரகிரி- சுந்தர்ராஜன்
சேலம் தெற்கு- பாலசுப்பிரமணியம்
வீரபாண்டி- ராஜாமுத்து
ஸ்ரீவில்லிபுத்தூர்- மன்ராஜ்
மேட்டுப்பாளையம்- செல்வராஜ்
திருப்பூர் வடக்கு- விஜயகுமார்
மடத்துக்குளம்- மகேந்திரன்
ஆகிய 13 சிட்டிங் எம்எல்ஏக்களுக்குத்தான் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் பெயர் முதல் பட்டியலிலேயே வரும் என எதிர்பார்த்த நிலையில் அவரது அவிநாசி தொகுதி பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலாவது அவருக்கு வேறு தொகுதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வழங்கப்படவில்லை. முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுவதாக சொல்லப்பட்டது.
தலைமையிடமும் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த அவர் தவெகவில் இணைந்தார். அப்போது தனது தந்தை தனபால் அதிமுகவில் ஓரங்கட்டப்படுகிறார், அவரை யாரும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
மேலும் அவிநாசி தொகுதிக்கு தனபால் வருவதே இல்லை என அத்தொகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் தனபாலுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அது போல் ஆரணியை சேர்ந்த சேவூர் ராமசந்திரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. அது போல் வெல்லமண்டி நடராஜன், வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications