மகாராஷ்டிரா மாடல்.. தமிழகத்தின் ஷிண்டே செங்கோட்டையன்? எடப்பாடி எக்ஸிட்.. ஏக குஷியில் ஓபிஎஸ், சசிகலா!
சென்னை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட டெல்லி பயணம் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் உருவாகும் என்பதற்கான சிக்னல் என கூறப்பட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக விதித்த சில நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொள்ளாததால் எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து விட்டு செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக பல்வேறு முன்னாள் அமைச்சர்களுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில், அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் கூட்டணி மாறுதல்கள் இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி முடிவுக்கு வந்தது.
இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக கூறிவந்தனர். இந்த நிலையில் திடீரென அரசியல் களம் மாறி இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக அவர் கூறினாலும் பாஜக முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கலாம் என கூறப்பட்டது.

அதிமுக விவகாரம்:
எதிர்பார்த்தது போலவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, சி.வி. சண்முகம், தம்பிதுரை எம்பி ஆகியோரும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் இவர்கள் கூட்டாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அமித் ஷாவை மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தனியே 50 நிமிடம் சந்தித்து பேசினார்.
அமித் ஷா:
சந்திப்பின் முடிவில், 2026 சட்டமன்றத் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திப்பது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கூட்டணி ஆட்சி என அமித் ஷாவும் உறுதி செய்திருக்கிறார் என யூகங்கள் வெளியானது. இந்த நிலையில் அதிமுக தலைமையில் தான் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பதவி விலக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைமையிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை:
இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டு நிலையில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருப்பதை அண்ணாமலை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி விதித்த சில நிபந்தனைகளை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல பாஜக விதித்த நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
பாஜக - அதிமுக கூட்டணி:
ஆனாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அவசியம் என உணர்ந்திருக்கும் பாஜக இதற்காக எடப்பாடி பழனிச்சாமியை கூட வெளியேற்ற தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்பாடாகத் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றார் என சொல்லப்படுகிறது. தனிப்பட்ட பயணம் எனக் கூறினாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடர்பாகவே நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி:
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிடிவாதத்தால் அதிருப்தியில் இருக்கும் பாஜக அவரை கூட ஓரங்கட்டலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என பாஜக தலைமை விரும்பும் நிலையில் அதற்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொள்ளவில்லை. இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியை ஓரங்கட்டி விட்டு செங்கோட்டையன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை கொண்டு ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கி தேர்தலை சந்திக்க கூட பாஜக தயார் என கூறப்படுகிறது.
செங்கோட்டையன்:
இதன் காரணமாகவே செங்கோட்டையன் இன்றும் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் பாஜக நேரடியாகவே கூறிய நிலையில் அதுலயும் அவர் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது என்கின்றனர். மேலும் சில முன்னாள் அமைச்சர்களுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வரும் வேளையில் இதனை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
உடையும் அதிமுக?:
மேலும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பிறகு கட்சி ஓரளவு செல்வாக்கு பெற்று இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தான் விலக தயார் என அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலையையும் பதவியிலிருந்து விலக்க பாஜக தலைமை விரும்பவில்லை. இதை அடுத்து கட்சியை உடைக்கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
டெல்லி தலைமை:
ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளில் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து அந்த கட்சியை இரண்டாக உடைத்தது பாஜக. தற்போது அதே பாணியில் அதிமுகவையும் உடைக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமலாக்கத்துறை உள்ளிட்ட சில விவகாரங்களில் எடப்பாடி தரப்பு சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரே பாஜக விதிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்பட்டாலும் படலாம் இல்லையேல் அதிமுக உடைய நிச்சயம் என்கின்றனர் டெல்லி தரப்புடன் தொடர்பில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்:
அதே நேரத்தில் அதிமுகவிலிருந்து ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டால், கட்சிக்கு பொதுவான நபராக செங்கோட்டையன் கட்சியின் தலைமை நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. அவருக்கு ஒத்துழைப்பு வழங்க ஓபிஎஸ், சசிகலா தரப்பும் தயார் எனவும் சொல்லப்படுகிறது. இப்படியாக செங்கோட்டையனின் இரண்டாவது முறை டெல்லி பயணம் மிகுந்த கவனத்தை பெற்று இருக்கிறது. ஏற்கனவே செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குதாக கூறப்பட்டுள்ள நிலையில் சாமிக்கு சிக்னல் கொடுக்கும் நடவடிக்கை தான் அது என்கின்றனர். இப்படியாக தன்னை சுற்றி இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து எடப்பாடி பழனிச்சாமியும் அச்சத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் அதிமுக தொடர்பான விவகாரங்கள் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications