எல்லா சேனல்லயும் ஓபிஎஸ் பேட்டி.. அதிமுக அதிகாரப்பூர்வ சேனல்ல என்ன ஓடுச்சுனு பாருங்க.. சலசலப்பு!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது தமிழகத்தின் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ அதனை புறக்கணித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வகிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இன்றைய நிகழ்வு அந்தக் கருத்தை வலுவாக மெய்ப்பித்துள்ளது.
கட்சியில் தனது இடத்தை நிறுவ ஓ.பன்னீர்செல்வம் போராடி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ கட்சி சேனல் அவரைப் புறக்கணித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதல் போக்கு
அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதல் போக்கு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுகுறித்து ஆலோசிக்க முன்னதாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரம் இரண்டு தரப்பினருக்கும் இடையே வெடிகுண்டு வீசியுள்ளது.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக குரல் எழுப்பிய மாவட்ட செயலாளர்கள் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்றதாக கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார் உறுதிப்படுத்தினார். இது இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினருக்கு இடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.

மாற்றி மாற்றி ஆலோசனை
அதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் தங்களது இல்லத்தில் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சேலத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தனது வீட்டில், தனது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்னை அதிமுக அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகம் வந்த நிலையில், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்நிலையில் இன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இரட்டை தலைமை விவாதம் தேவையற்றது. எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். நானும், எடப்பாடி பழனிசாமியும் பேசி ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். பொதுக்குழுவுக்கு முன்னதாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்து விட்டால் பொதுக்குழுவில் எந்த பிரச்சனையும் வராது." என எடப்பாடி பழனிசாமிக்கு பேச்சுவார்த்தை அழைப்பு விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

நியூஸ் ஜெ
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது தமிழகத்தின் அனைத்து முன்னணி செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ ஓ.பி.எஸ் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்துள்ளது. அந்த நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகத்தின் பேச்சை ஒளிபரப்பியுள்ளது நியூஸ் ஜெ தொலைக்காட்சி.

அதிகாரப்பூர்வ சேனல்
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலாக இருந்து வந்த ஜெயா டிவியை சசிகலா தரப்பினர் கையகப்படுத்தியதால், தங்களுக்கு ஆதரவாக நியூஸ் ஜெ எனும் சேனலை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி வகையறாவினர். இந்த சேனலில் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது வழக்கம். காரணம், சேனலை நிர்வகிப்பவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்டது.

நிரூபணம்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், இன்றைய நிகழ்வு அந்தக் கருத்தை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது. அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் வலுவாகத் தலைதூக்கி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்துள்ள ஓபிஎஸ்ஸை புறக்கணித்துள்ளது நியூஸ் ஜெ. இது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications