சொத்துவரி உயர்வு.. தமிழ்நாடு முழுக்க களமிறங்கிய அதிமுக தலைகள்.. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
சொத்து வரியை உயர்த்தாவிட்டால் மத்திய நிதியை விடுவிக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் மத்திய அரசு நிர்பந்தித்ததால் இப்படி செய்ததாக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

சொத்து வரி
வீடுகள், வணிக வளாகங்கள், கூடங்கள் ஆகியவை இருக்கும் அளவை பொறுத்து சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 600 சதுர அடிக்கும் குறைவான கட்டடங்களுக்கு 25 சதவிகிதம் வரி உயர்த்தப்படுகிறது. 1,800 சதுர அடிக்கும் அதிகமுள்ள கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1,201 முதல் 1,800 சதுர அடி உள்ள கட்டடங்களுக்கு 75 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

விளக்கம்
மத்திய அரசின் நிதிக்குழு கூறிய காரணத்தால் மட்டுமே இந்த வரி உயர்த்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு நிதிகளை விடுவிக்க முடியாது, வரியை உயர்த்தினால் மட்டுமே நிதியை விடுவிப்போம் என்று கூறியதால் இப்படி செய்ததாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த வரி உயர்வை எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக எதிர்த்து உள்ளது.

அதிமுக எதிர்ப்பு
அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக இன்று தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது . மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி வருகிறார்கள். இதற்காக அதிமுக பலத்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதிமுக போராட்டம்
திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார் . சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றுள்ளார் . சென்னையில் 15 மண்டலங்களிலும் அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து ஓபிஎஸ், இபிஎஸ் இதில் உரையாற்றி வருகிறார்கள். ராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications