29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?
சென்னை: அதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிப்பதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வரவிருக்கிறார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும், நாளை மறுநாள் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்து போட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி அமைக்கப்பட்டது. இதன்பின் என்டிஏ கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துவிட்டன. இருந்தாலும் இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிக்கப்படவில்லை. ஏற்கனவே 2 முறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திவிட்டார்.

ஆனால் பாஜக எதிர்பார்க்கும் எண்ணிக்கையை எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை. இதனால் கொதித்துபோன பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பாஜக தலைமையை டீல் செய்யுமாறு கூறினார். இதன்பின் டெல்லி பாஜக தலைமை, பியூஷ் கோயலை சமாதானப்படுத்தி சென்னைக்கு அனுப்பி இருக்கிறது. நாளை மீண்டும் பியூஷ் கோயல் சென்னை வரவிருக்கிறார்.
நாளை மாலை எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல் இடையிலான சந்திப்பு நடக்கவுள்ளது. இந்த முறை தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. அமமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கும் சேர்த்தே பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை பேசவிருக்கிறது.
அதில் பாஜகவுக்கு மட்டும் 29 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை எதிர்பார்க்கிறது. குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, தி நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது. கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் பாஜகவினர் அதனைவிட ஒரு தொகுதியிலாவது கூடுதலாக போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். அதிமுகவுக்கு இது புதிய நெருக்கடியாகவும் அமைந்துள்ளது. இதனால் பியூஷ் கோயல் வருகை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications