ஓபிஎஸ் பேச வாய்ப்பு கொடுத்த விவகாரம்.. "சபாநாயகர் செய்தது" மரபு என்ன தெரியுமா? மாஜி அமைச்சர் பரபர
சென்னை: பேரவைத்தலைவர் அதிமுகவிற்கு பிரச்சினை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிட்ட அவருக்கு (ஒபிஎஸ்) எதோ ஒரு சிறப்பு செய்வது போல கருதி மரபு மீறிய செயலை செய்தார். அதை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என்று அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ் மணியன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, முதல்வர் மு க ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து சட்டசபையில் பேசினார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு
இந்த மசோதா மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ, ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்எல்ஏ, நாகை மாலி, பாஜக குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக குழுத்தலைவர் ஜிகேமணி, காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினர். தளவாய் சுந்தரம் பேசுகையில், "இளைஞர்களை உயிர் பலி வாங்கும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி சட்டம் கொண்டு வந்தார்.

ஓபிஎஸ் பேச வாய்ப்பு
ஆனால் இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்து விட்டது. மாநில உரிமைகளில் தலையிட கவர்னருக்கு உரிமை இல்லை என கோர்ட்டு தெரிவித்துள்ளது. தற்போது மீண்டும் கொண்டு வந்துள்ள இந்த சட்ட மசோதாவை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது" என்றார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச சபாநாயகர் அப்பாவு பேச வாய்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஓ பன்னீர் செல்வம், அதிமுக சார்பில் இந்த மசோதாவை ஆதரிப்பதாக கூறினார்.

ஓபிஎஸ்சுக்கு எதிராக கோஷம்
ஓ பன்னீர் செல்வம் இவ்வாறு குறிப்பிட்டதும் அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷமிட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டருக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கலாம் என்று அவர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் குரல் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகர் அப்பாவுவிடம் இது குறித்து முறையிட்டார்.

சபாநாயகர் விளக்கம்
மேலும் கட்சிக்கு ஒருவர் தான் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறி விட்டு, குழப்பத்தை உண்டாக்கலாமா, பெரும்பாலான எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினர். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் என்கிற முறையில் உறுப்பினர் என்று தான் அழைத்தேனே தவிர எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றோ, அதிமுக என்றோ நான் சொல்லவில்லை என்றார்.

பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்றே
எனினும் தொடர்ந்து கடும் அமளி நிலவியது. ஓ பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே சபாநாயகர் ஓபிஎஸ்-ஸை பேச அழைத்திருக்கிறார் என்று அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ் மணியன் தெரிவித்தார்.

இதுவரை எப்படி இருந்து இருக்கிறது
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.எஸ் மணியன் கூறுகையில், ''பேரவைத்தலைவர்களின் மரபு மீறிய செயல். பேரவையில் கட்நி உறுப்பினர்கள் சுயேட்சை உறுப்பினர் என யாராகக இருந்தாலும் அவர்களை பேச வைக்கிற முறை மரபு இதுவரை எப்படி இருந்து இருக்கிறது என்று கேட்டால், ஒற்றை உறுப்பினராக இருக்கிறவரில் தொடங்கி எண்ணிக்கைகளின் அடிப்படையில் பேரவைத்தலைவர் பேச அழைப்பார்.

மரபு மீறிய செயலை செய்தார்
இதன்படி தான் ஒற்றை உறுப்பினரில் தொடங்கி 62 உறுப்பினர்களை கொண்ட அதிமுக வரை பேச அழைத்தார்கள். அப்படி பேச அழைத்ததற்கு பிறகு அதோடு முடிந்து விட்டது. அதற்கு மேல் பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு கிடையாது. ஆனால் பேரவைத்தலைவர் அதிமுகவிற்கு பிரச்சினை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிட்ட அவருக்கு (ஒபிஎஸ்) எதோ ஒரு சிறப்பு செய்வது போல கருதி மரபு மீறிய செயலை செய்தார். அதை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications