"கோ பேக் ராகுல்" போராட்டம் அறிவித்த அர்ஜுன் சம்பத்! நள்ளிரவில் ரயிலில் புகுந்து கைது செய்த போலீஸ்
சென்னை: ராகுலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரும் 2024இல் நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்குத் தயாராகும் பணிகள் காங்கிரஸ் கட்சி இப்போதே தொடங்கி உள்ளது. இதற்காக ராகுல் காந்தி பாரத் ஜோடோ பாத யாத்திரை நடத்துகிறார்.
புதன்கிழமை கன்னியாகுமரியில் பாத யாத்திரையைத் தொடங்கும் ராகுல் காந்தி, காஷ்மீர் வரை செல்ல உள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்வைத் தரும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாகவும் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மக்களைத் திரட்டும் ஒரு முயற்சியாகவும் ராகுல் காந்தி இந்தப் பாத யாத்திரையை முன்னெடுத்துள்ளார். இதனை ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்குகிறார். முதல்வர் ஸ்டாலின் இந்த பாத யாத்திரையைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தார்.

பாத யாத்திரை
சென்னை ஏர்போர்ட்டில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. காலையில் ஸ்ரீபெரும்பதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்துகிறார். நாளை விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் ராகுல் காந்தி, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி வர உள்ளார். அங்கிருந்த தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்குகிறார்.

கோ பேக் ராகுல்
முன்னதாக, ராகுல் காந்திக்கு எதிராக "கோ பேக் ராகுல்" என்ற இயக்கத்தைத் தொடங்கப் போவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போதும் "கோ பேக் மோடி" டிரெண்ட் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அர்ஜுன் சம்பத், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக "கோ பேக் ராகுல்" இயக்கத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்து இருந்தார்.

அர்ஜுன் சம்பத்
கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரையைத் தொடங்கும் நிலையில், அவருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்ட உள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் அறிவித்தார். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்றும் கூட அஞ்சப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிராகக் கருப்பு கொடி போராட்டம் நடத்த அர்ஜுன் சம்பத் கோவையில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூலம் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார்.

கைது
அப்போது ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த போது, டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர். ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டதும் அதில் திடீரென சில போலீசார் ஏறினர். இதைக் கண்டு ரயில் பயணிகள் முதலில் அஞ்சினர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அர்ஜுன் சம்பத்தை ரயில் இருந்து இறக்கி போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications