தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் நம்மை ஒரு வழி செய்துவிட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முழுமையாக கொரோனாவால் நாம் இயல்பு வாழ்க்கையை இழந்தோம்.
இந்த இரண்டு ஆண்டுகள் பெரும்பாலான நேரம் ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். வேக்சின், தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்கள் வந்தது.

கொரோனா
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா பரவல் முதல் அலை ஏற்பட்டது. அதன் பிறகு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்த நிலையில், மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அடுத்த அலை ஏற்பட்டது. இப்படி தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று கொரோனா அலைகள் ஏற்பட்டது. மனித இழப்புகள் ஒரு பக்கம் என்றால்.. பொருளாதார பாதிப்புகளும் மற்றொரு பக்கம் மிக மோசமாகவே இருந்தது. இப்போது தான் நாம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம்.

அதிகரிக்கும் பாதிப்பு
இதற்கிடையே கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. பொதுவாகத் தலைநகர் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது சென்னையைக் காட்டிலும் கோவையில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கோவையில் நேற்று 20 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆலோசனை
ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில் இருந்து வந்த இருவர் உட்பட மாநிலத்தில் 74 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலையில், அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று காலை 11 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டில் இப்போது சென்னை, கோவை தவிர வேறு எங்கும் வைரஸ் பாதிப்பு இரட்டை இலக்கில் இல்லை. மாநிலம் முழுக்க இப்போது 402 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாகக் கோவையில் மட்டும் 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் மாநிலத்தில் 37 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,57,225ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications