பாதி பேர் பெயரை காணோம்.. வாய்ப்பு பெறாத முக்கிய தலைகள்.. டிடிவியின் அசத்தல் திட்டம் என்ன?
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வெளியாகி இருக்கும் 9 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் பலகேள்விகளை எழுப்பி இருக்கிறது.
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வெளியாகி இருக்கும் 9 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் பலகேள்விகளை எழுப்பி இருக்கிறது. பல முக்கியமான வேட்பாளர்களுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது.
அதே நாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பட்டியலை தற்போது டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

9 தொகுதி வேட்பாளர்கள்
மொத்தம் 21 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக இருக்கிறது. இதில் வழக்கு காரணமாக மூன்று தொகுதிகளில் தேர்தல் நடக்கவில்லை. மீதமுள்ள 18 தொகுதிகளில்தான் தேர்தல் நடக்கிறது. ஆனால் அதில் 9 தொகுதிகளுக்கு மட்டுமே டிடிவி தினகரன் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

சிலர் இல்லை
இந்த 9 தொகுதிகளில் முக்கியமான பல வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிக வாய்ஸ் இருக்கும் முக்கியமான வேட்பாளர்களின் பட்டியல் இந்த லிஸ்டில் இடம்பெற வில்லை. இது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
|
வாய்ப்பு வழங்கப்படவில்லை
18 தொகுதிகளில் ஓசூர், திருவாரூர் தவிர்த்து 16 தொகுதிகள் எம்எல்ஏ தகுதி நீக்கம் காரணமாக காலியான தொகுதிகள் ஆகும். ஒட்டபிடாரம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. அதனால் 9 சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் தினகரன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். 9 தொகுதிகளிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களே அ.ம.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏன் இல்லை
ஆனால் மீதமுள்ள 7 தொகுதிகளில் பழைய தகுதி நீக்க எம்எல்ஏக்கள் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இல்லை. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலில் இவர்கள் பெயர்கள் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன காரணமும்
அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துவிட்டார். இதனால் அங்கு அமமுக புதிய வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதனால் அந்த தொகுதிக்கு இப்போது வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

தங்கதமிழ்செல்வன் ஏன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கியமான உறுப்பினர் தங்கதமிழ்செல்வன். அவர் தொகுதி ஆண்டிப்பட்டி ஆகும். ஆனால் ஆண்டிபட்டியில் தங்கதமிழ்செல்வன் பெயரை ஏன் முதல் பட்டியலில் தினகரன் அறிவிக்கவில்லை என்ற குழப்பம் உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தங்கதமிழ்செல்வனை தினகரன் வலியுறுத்துகிறார் என்றும் செய்திகள் வருகிறது.

என்ன திட்டம்
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த உறுப்பினர்கள் எல்லோரும் தமிழகம் முழுக்க பிரபலமான நபர்கள். அதனால் இவர்கள் எம்.பி தேர்தலில் நின்றாலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. அதனால் லோக்சபா தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வருகிறது. அதே சமயம் சில வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications