பாகிஸ்தான் வெள்ளம் நினைவு இருக்கா? தமிழ்நாட்டிலும் 'பேரிடர்' வரப்போகுதாமே.. ஆய்வாளர்கள் பகீர் தகவல்
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் சுமார் 30% நிலப்பரப்பை பாதித்தது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை: காலநிலை மாற்றத்தால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் முதல் 50 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பிடித்திருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுக்களால் காலநிலை தொடர்ந்து இயல்பை இழந்து வருகிறது. ஒரு கட்டத்தில் பனிப்பாறைகள் உருகுவது மட்டுமே காலநிலை மாற்றம் என்று நினைத்துக்கொண்டிருந்த நமக்கு கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், காலநிலை மாற்றம் குறித்த மேலதிக புரிதலையும் பயத்தையும் உருவாக்கியது. இந்நிலையில் தற்போது காலநிலை மாற்றம் குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த Cross Dependency Initiative (XDI) எனும் ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி 2050ம் ஆண்டில் 2,600க்கு அதிகமான மாநிலங்கள்/மாகாணங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் என்றும் இதன் மூலம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள சூழலியல் ஆய்வாளர்கள் தங்கள் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அறிக்கையும் கவலையும்
இந்த அறிக்கை பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். எந்தெந்த மாநிலங்களில் காலநிலை சீராக இருக்கிறது என்பதை முன்கூட்டியே கணிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு இந்த அறிக்கை பயன்படும். நோக்கம் எதுவாக இருந்தால் என்ன, அது மக்களுக்கு பயன்படுகிறது என்பதால் ஆய்வாளர்கள் அறிக்கையை வரவேற்றுள்ளனர். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் அறிக்கையின் முதல் 50 இடங்களில் இந்தியாவின் 9 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன என்பதுதான்.

தமிழ்நாடு
இந்த 9ல் தமிழ்நாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் உள்ள மாநிலங்களில் வெள்ளம், காட்டுத் தீ, வெப்ப அலை மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற தீவிர வானிலை/காலநிலை மாற்றம் ஏற்படும். அந்த வகையில் அறிக்கையின் முதல் 50 இடங்களில் பீகார் 22வது இடத்திலும், உத்தரப் பிரதேசம் 25வது இடத்திலும், அசாம் 28வது இடத்திலும் இருக்கிறது. அதேபோல ராஜஸ்தான் (32), தமிழ்நாடு (36), மகாராஷ்டிரா (38), குஜராத் (48), பஞ்சாப் (50) ஆகிய இடங்களிலும் கேரளா 52வது இடத்திலும் இருக்கிறது. இந்த மாநிலங்களில் மேற்குறிப்பிட்ட இயற்கை பேரிடர்களில் ஏதேனும் ஒன்று ஏற்படும் என்றம், இதன் மூலம் மாநிலத்தின் நிலையான கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமா?
இதேபோன்ற அறிக்கை 1990களில் வெளிவந்த போது அசாம் மாநிலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அசாம் மாநிலத்திற்கான பாதிப்பு 330 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வின்படி இயற்கை பேரிடர்கள் ஏற்பட 2050ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு முன்னரே பேரிடர் ஏற்படலாம். இதற்கான உதாரணம்தான் பாகிஸ்தானின் சிந்து மாநிலம். இந்த மாநிலமும் முதல் 100 இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.

பாதிப்பு எப்படி இருக்கும்?
எனவே இதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளம் நாட்டின் 30% நிலப்பரப்பை பாதித்தது. தற்போது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்க இதுவும் ஒரு காரணமாகும். இந்த ஆய்வு அறிக்கையில் முதல் 50 இடங்களில் இந்தியாவின் மாநிலங்களை தவிர்த்து சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் முக்கிய மாகாணங்களும் இடம்பிடித்துள்ளன. தவிர லண்டன், மிலன், முனிச் மற்றும் வெனிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களும் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications