அவசரப்படும் ராமதாஸ்.. அமைதியாய் அன்புமணி! பதுங்குவது பாய்வதற்குத்தானா? வெளியான பரபர தகவல்!
சென்னை: பாமகவின் நாளுக்கு நாள் தந்தை மகன் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில் நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்து இருந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ராமதாஸின் நடவடிக்கைகளை அன்புமணி அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
மிகவும் பரபரப்பாக இருக்கிறது தமிழ்நாடு அரசியல் தேர்தல் களம். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்த மறைமுக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி பாமக, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார். மாநிலங்களவை சீட்டு விவகாரம் தொடர்பாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்.

எனவே வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என பாஜக மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு கிரீன் சிக்னலும் கிடைத்த நிலையில் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இருந்த மறைமுக மோதல் பொது வெளியில் பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி -வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. அந்த விழாவில் குழு தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமனம் செய்யப்பட்டார். மாநாட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க சில நாட்களுக்கு முன்னதாக அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் ராமதாஸ். மேலும் பல லட்சம் பேர் கூடி இருந்த மாநாட்டில் ராமதாஸ் சில கருத்துக்களை கூற அது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தந்தை மகன் இடையே மோதல் வெடித்திருப்பது பொதுவெளியில் தெரிய வந்தது. அதே நேரத்தில் ராமதாஸ் குறித்த எந்த விதமான எதிர் கருத்துக்களையும் தெரிவிக்காமல் அன்புமணி அமைதி காத்து வந்தார். தொடர்ந்து ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டங்களை 99 சதவீதம் நிர்வாகிகள் புறக்கணித்ததால் அவர்களை நீக்கி வருகிறார். இதுவரை பாமக மாநில செயலாளர், பொருளாளர், பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் ராமதாஸால் நீக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக ராமராஸ் வெளியிடும் அறிக்கைகளில் 'பசுமை நாயகர் செயல் தலைவர் அன்புமணி' என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அன்புமணியின் பெயர் இடம் பெறவில்லை. இது பாமக நிர்வாகிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அன்புமணி மாவட்டம் தோறும் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்களை நடத்திவரும் நிலையில் டெல்லிக்கும் பயணம் மேற்கொண்டார். கட்சி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர், தனக்கே கட்சியில் நிர்வாகிகளை நீக்கும், சேர்க்கும், நியமிக்கும் அதிகாரம் இருப்பதாக அன்புமணி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருக்கும் நிலையில் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தந்தையை மீறி மகன் டெல்லிக்குச் சென்ற தகவலை சிலர் ராமதாஸிடம் தெரிவித்திருக்கின்றனர். கட்சியில் தன்னை நேரடியாகவே அன்புமணி எதிர்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமலேயே ராமதாஸ் இந்த முடிவை வெளியிட்டு இருக்கிறார் என்கின்றனர். அதே நேரத்தில் ஜிகே மணி உள்ளிட்டோர் தந்தையும் மகனும் ஒன்று சேர்வார்கள் எனவே கூறி வருகின்றனர். ஆனால் போகிற போக்கை பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை என தோன்றுகிறது.
தற்போது பொதுக்குழு முடிவின்படி ராமதாஸ் மற்றும் அவர் நியமித்த நிர்வாகிகளை கட்சியில் தொடர்கிறார்கள். ராமதாஸ் நியமித்த நிர்வாகிகளின் நியமனம் செல்லாது என கூறும் அன்புமணி ஆதரவாளர்கள், விரைவில் தேர்தல் ஆணையத்தின் மூலம் கட்சியின் முழுமையாக அன்புமணியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கின்றனர்.
மேலும் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் ராமதாசை தவறாக வழிநடத்தி வரும் நிலையில் இது போன்ற விவகாரங்கள் தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது என்கின்றனர். அன்புமணி 100 நாள் சுற்றுப்பயண திட்டத்தை அறிவித்திருக்கும் நிலையில் ராமதாஸ் அதற்கு போட்டியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அன்புமணியின் முறையிட்டுக்கு தேர்தல் ஆணையம் சொல்லும் பதில் தான் கட்சி விவகாரங்களை முடிவுக்கு கொண்டுவரும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications