சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய பின் டெல்லியில் இருந்து சென்னை வந்த அண்ணாமலைக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு சுமார் 100க்கும் அதிகமான ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி கூறி அண்ணாமலை அங்கிருந்து காரில் ஏறி சென்றார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். பாஜகவில் இருந்து விலகும் முடிவை எடுத்த அண்ணாமலை, டெல்லி சென்று தேசிய பாஜக தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், அண்ணாமலை அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகிவிட்டேன். 18 மாதங்களாக பாஜக தலைமையுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்காக எதிர் கால பாதை குறித்து எனது எண்ணங்கள் மூலமாக தலைவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை. தமிழ்நாட்டை பொறுத்த வரை நமது கருத்துக்கள் ஒத்துப் போகவில்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்.
நீண்ட யோசனைக்கு பின் கட்சியில் இருந்து விலகி, எதிர்காலத்தில் என் போக்கில் பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இது நம்ம இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் அண்ணாமலை தொடங்கியுள்ளார். அண்ணாமலை இந்த இயக்கத்தை தொடங்கிய பின், தற்போது 8 லட்சத்திற்கும் அதிகமானோர் அதில் இணைந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜகவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலை இயக்கத்தில் சேர்வதற்காக கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்து வருகின்றனர். விரைவில் தமிழக பாஜகவின் அடிமட்டமே ஆட்டம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார்.
சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலைக்கு அவரின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த அண்ணாமலை, ஆதரவாளர்களுக்கு நன்றி கூறி காரில் ஏறி கையசைத்து சென்றார்.












Click it and Unblock the Notifications