மீண்டும் மீண்டும் "பலி ஆடு".. டாஸ்மாக்கை கையிலெடுத்த பாஜக.. அதென்ன காஞ்சிபுரத்தில்? திணறுதா திமுக?
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் விவகாரம் மீண்டும் புயலை கிளப்ப துவங்கி உள்ளது.. இதுகுறித்து, திமுக அரசை, எதிர்க்கட்சிகளும் விமர்சிக்க துவங்கி உள்ளன.
கடந்த வருடம் தீபாவளியின்போது, டாஸ்மாக் வருவாய், மிகப்பெரும் பரபரப்பை தந்திருந்தது.. எனவே, இந்த வருடம் தீபாவளிக்கும் டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்வியை, 4 நாட்களுக்கு முன்பு அமைச்சர் முத்துசாமியிடமே செய்தியாளர்கள் கேட்டனர்.

முத்துசாமி விளக்கம்: அதற்கு அமைச்சர் முத்துசாமி, "தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை... மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு" என்று கூறியிருந்தார்.
வழக்கமாக, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் நிலையில், இந்த தீபாவளிக்கு 2 நாள் வருமானமாக, மொத்தம் ரூ.467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
டாஸ்மாக் வருமானம்: தீபாவளிக்கு முன்தினம் 11ம் தேதி அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.52.73 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.48.12 கோடி, கோவையில் ரூ.40.20 கோடி, திருச்சியில் ரூ.40.02 கோடி, சேலத்தில் ரூ.39.78 கோடிக்கு மது விற்பனையானதாகவும், தீபாவளி தினத்தில், திருச்சியில் ரூ.55.60 கோடி, சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.511.97 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, கோவையில் ரூ.39.61 கோடிக்கு மது விற்பனையானதாகவும் தகவல் வெளியானது.
இதைத்தான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "மதுவிலக்கு துறையா அல்லது மது விற்பனைத் துறையா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு, மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது" என்று திமுக அரசை சாடியிருந்தார்.
விமர்சனம்: இதுபோக, சென்னை அண்ணா நகரில், மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் உயிரிழந்த நிலையில், திமுக அரசு மீதான விமர்சனங்கள் மேலும் அதிகமாகி வருகிறது.
"உடல் நலக்குறைவு மரணங்கள், இதுபோன்ற விபத்துக்களால் பலியாகும் அப்பாவிகளின் மரணங்கள் எதைப் பற்றியும் கவலை இன்றி, உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை நடத்தி வருகிறது. திமுகவினர் நடத்தும் மது ஆலைகளிடம் வாங்கி விற்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனை இத்தனை என்றால், அந்த ஆலைகள் நடத்தும் திமுகவினரின் வருமானம் என்னவாக இருக்கும்? தங்கள் கட்சிக்காரர்கள் வருமானத்துக்காக, அப்பாவி பொதுமக்கள் உயிரை பலி கொடுத்து கொண்டிருக்கிறது திமுக" என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
வீடியோ: இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. காஞ்சிபுரம், ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மார்க்கெட் பகுதி என்பதால், பொதுமக்கள் நடமாட்டம் எப்போதுமே இங்கு அதிகமாகவே இருக்கம். அதனால்தான், இந்த மதுக்கடை செயல்படுவதற்கு, அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், மது பிரியர்கள், மதுவை வாங்கி கொண்டு, அங்கேயே ரோட்டோரம் உட்கார்ந்து கொண்டு தண்ணி அடிக்கிறார்களாம். இதைத்தவிர, அங்கேயே கும்பலாக நின்றுக்கொண்டு ரகளையிலும் ஈடுபட்டு வருகிறார்களாம். இதனால், பெண்கள் அந்த பகுதியில் செல்ல அச்சப்படுகிறார்களாம்.. எனவே, மார்க்கெட் பக்கத்திலுள்ள டாஸ்மாக்கை அகற்றுவதுடன், ரோட்டிலேயே உட்கார்ந்து தண்ணி அடிக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை கேட்கிறார்கள்.
காஞ்சிபுரம்: இந்த குடிமகன்களின் வீடியோதான் வைரலாகி வருகிறது. இந்த தீபாவளிக்கு, இதே காஞ்சிபுரம் மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் மட்டும், சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்திருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
ஏற்கனவே, மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தில், திமுக அரசு மீது, தமிழக மக்களுக்கு பெருத்த கவலை ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிருப்திகள் கூடிவருவதால், இதுகுறித்த நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications