"ஏசி ரூம்ல தேர்தல் வியூக நிபுணர் சொல்வதை கேட்பது அரசியலா?” விஜய் - பிகே மீட்டிங் பற்றி அண்ணாமலை!
சென்னை: தவெக தலைவர் விஜய் - தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. "ஏ.சி ரூமில் தேர்தல் வியூக நிபுணர்களை உட்கார வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்பது அரசியலா?" என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பிரசாந்த் கிஷோர்
2014 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்காக குறிப்பாக, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பணியாற்றியது பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம். அப்போது முதல் இந்திய அரசியலில் தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற சொல் பிரபலமடையத் தொடங்கியது. அதேபோல் ஐ பேக் நிறுவனமும், பிரசாந்த் கிஷோரும் கவனம் பெற்றனர்.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றியது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். அதைத்தொடர்ந்து, பிரசாந்த் கிஷோர், பீகார் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். பீகார் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் தேர்தல் வியூக வகுப்பு பணிகளில் பி.கே தீவிரம் காட்டத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.
தவெக - பி.கே
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இப்போதே அதற்கான பணிகளை தவெக தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு மூலம் அது மேலும் தீவிரமாகும் என்று கூறப்படுகிறது. தவெகவுக்கு 15 % - 20% வாக்குகள் கிடைக்கும் என பிரசாந்த் கிஷோரின் குழு ஆய்வு அறிக்கையை தவெகவுக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.
அண்ணாமலை பேட்டி
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தைப்பூசம் விழாவையொட்டி காவடி எடுத்தார். அதன்பின்னர் பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "யார் ஒருவரை எத்தனை முறை சந்தித்தாலும், நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறோம்.
இதெல்லாம் அரசியலா?
மக்களை சந்தித்தால் அவர்கள் பிரச்சனையைச் சொல்வார்கள். அதுதான் அரசியல். ஏ.சி ரூமில் உட்கார்ந்து கொண்டு தேர்தல் வியூக நிபுணர்களை உட்கார வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்பது என்ன அரசியல்? மக்களை சந்தியுங்கள், தெருவில் நில்லுங்கள், மக்கள் ஒவ்வொருவரும் அரசியல் வியூகவாதிகள் தான்.
மக்களைச் சந்திக்காமல் ஒவ்வொரு தலைவரும் தேர்தல் வியூக நிபுணரை வைத்து ஜெயித்து விடலாம் என நினைத்தால், வரும் காலத்தில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். எல்லோரும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு பொலிடிக்கல் கன்சல்டண்டை வைத்து அரசியல் செய்து விட முடியுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications