ஈரோட்டில் பாஜக நிற்கட்டும்.. அறிவுறுத்திய டெல்லி.. ஏற்றுக்கொள்ளாத அண்ணாமலை.. "மணி" இப்படி சொல்லுறாரே
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தாங்கள்தான் பெரிய ஆள் என்பது போல பாஜகவினர் காட்டிக்கொண்டார்களே இப்போது அவர்கள் எங்கே என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று டெல்லி தரப்பு சொல்லி இருக்கிறது, ஆனால் அண்ணாமலை இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், இடைத்தேர்தல் அறிவித்ததும் முதலில் பணிக்குழு போட்டது பாஜக. பாஜக நிற்க போகிறது என்று பலரும் நினைத்தார்கள். இல்லையென்றால் அதிமுகவிற்கு ஆதரவு தரும் என்றார்கள். ஆனால் அதன்பின் பாஜக மாற்றி மாற்றி நிலைப்பாடு எடுத்தது. உறுதியாக நிலைப்பாடு எடுக்க முடியாமல் அண்ணாமலை ஏதேதோ பேசினார். அதற்கு முன்புதான் அண்ணாமலை பாஜகதான் இனி எதிர்க்கட்சி என்பது போல பேசினார். நாங்கள் வலுவாக இருக்கிறோம் என்றெல்லாம் பேசினார். திமுக vs பாஜகதான் இனி என்றெல்லாம் அண்ணாமலை பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள்தான் எல்லாமே என்று பேசினார்.

சமூக வலைத்தளம்
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தாங்கள்தான் பெரிய ஆள் என்பது போல காட்டிக்கொண்டார்களே இப்போது அவர் எங்கே. தைரியமாக் போட்டியிட வேண்டியது தானே? ஏன் அஞ்சி நடுங்கி போட்டியிடும் முடிவை கைவிட்டனர். அதற்கு என்ன அவசியம். எனக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து கிடைத்த நம்பகமான தகவலை வைத்து சொல்கிறேன். பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் ஆதரவாளர்கள் சிலர் சொன்னதை சொல்கிறேன். அதில் டெல்லி பாஜக தரப்பு தமிழ்நாடு பாஜக ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. வலியுறுத்தவில்லை. விருப்பப்பட்டு இருக்கிறது.

அண்ணாமலை
ஆனால் அண்ணாமலை இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணாமலை இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதுதான் உண்மை. நின்றால் சந்தி சிரித்திவிடும் என்று அவருக்கு தெரியும். ஆகாயத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதிக்கும் அளவிற்கும் அவர் பேசினார். ஆஹா.. எவ்வளவு பேச்சு பேசினார். இங்கே நின்றால் சாந்தி சிரிக்கும் என்றுதான் அவர் நிற்கவில்லை. அவர் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினார். அதிலும் கடந்த 6 மாதங்களில் அவர் பேசியது எல்லாம் சாதாரண விஷயமா? பாஜக வளர்கிறது என்று பலர் சொன்னார்கள். ஆனால் அது உண்மை இல்லை. பாஜகவை மக்கள் பார்க்க தொடங்கி உள்ளனர். ஆனால் அதற்காக பாஜக வளர்கிறது என்று சொல்ல முடியாது. அண்ணாமலை பேசாத பேச்சு இல்லை. அந்த அளவிற்கு பேசினார்.

தமிழ்நாடு பாஜக
தமிழ்நாட்டை காக்க வந்தது பாஜகதான் என்று கூறுகிறார்கள். பாஜகதான் உத்தம கட்சி என்று போல பேசினார்கள். ஆனால் தேர்தலில் நிற்கவில்லை. இங்கே நின்றால் தோல்வி அடைவோம் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் அஞ்சி நடுங்குகிறார்கள். தேர்தலில் நின்றாள் 4 டிஜிட் வாக்கிற்கு மேல் வராது. அதனால் அங்கே நிற்க அண்ணாமலை தரப்பு விரும்பவில்லை. ஆனால் டெல்லி பாஜகவோ தேர்தலில் தோல்வி அடைந்தால் பரவாயில்லை போய் நில்லுங்கள் என்று கூறி உள்ளனர். அமித் ஷா, மோடி அரசியல் வேறு. அவர்கள் தோல்வியை பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

டெல்லி பாஜக
டெல்லி பாஜக.. நீங்கள் போட்டியிடுங்கள் என்று அண்ணாமலையை அறிவுறுத்தியது. நிர்பந்தித்தது என்று சொல்ல மாட்டேன். டெல்லியை பேசி அண்ணாமலை சமாளித்துவிட்டார். அதனால்தான் சிடி ரவியை அழைத்து அண்ணாமலை பேச வைத்தார். இங்கே அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர் என்றுதான் கூற வேண்டும். அண்ணாமலையின் சுய நலத்திற்காக தமிழ்நாட்டில் பாஜக வளராமல் போகிறது. தமிழ்நாட்டில் பாஜக வளராமல் போனால் தமிழ்நாட்டிற்குத்தான் நல்லது. அதுதான் என் நிலைப்பாடும். பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே என் கொள்கை. ஆனால் ஒரு பத்திரிகையாளராக உண்மையை சொல்கிறேன்.. பாஜகவை வளர விடாமல் தடுப்பதே அண்ணாமலைதான். இதை நான் இங்கே சொல்ல வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications