எடப்பாடியே கண்ட்ரோல் பண்ணலையே.. சீறிய ராமதாஸ்.. கண்டுக்காத பிரேமலதா.. "நொறுங்கியது" இபிஎஸ் பிளான்?
சென்னை: அதிமுக சார்பாக மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த கூட்டணியில் ஒரு சில கட்சிகள் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில்தான்.. தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பு சுணங்கி கிடந்த அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.
ஹப்பாடா திமுகவை எதிர்க்க அதிமுக ஒரு திட்டம் வைத்து இருக்கிறது என்று ரத்தத்தின் ரத்தங்கள் சந்தோசம் அடைய தொடங்கினர். ஆனால் எடப்பாடியின் அந்த அறிவிப்பு நிஜமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடியின் அந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அது என்ன அறிவிப்பு?
நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார். இவரின் பேச்சை கேட்டதும் ஓகே அதிமுக பெரிய கூட்டணி வைக்க போகிறது என்று நிர்வாகிகள் பலரும் எதிர்பார்த்தனர். அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக + அமமுக ஆகிய கட்சிகள் சேரும் என்று எதிர்பார்த்தனர். அதன்படியே கூட்டணிக்கு டிடிவி தினகரனும் கிரீன் சிக்னல் கொடுத்தார்.

டிடிவி தினகரன்
இதை மறைமுகமாக வரவேற்ற டிடிவி தினகரன், திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்போம். நாங்கள், திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம். திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவதற்காக தயாராக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும் சரி, மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி நாம் கூட்டணி அமைத்தால்தான் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த முடியும் என்று டிடிவி தினகரன் பேசினார். சரி அப்படி என்றால் அமமுக - அதிமுக இணைய போகிறது.. சுபம் எண்ட் கார்ட் போடப்பட உள்ளது என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அமமுகவிற்கு எதிராக திடீரென பேசினார்.

விவாதம்
எடப்பாடி பேசிய மறுநாளே டிடிவி தினகரன் மெகா கூட்டணி பற்றி பேசியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. எடப்பாடி - டிடிவி சேர போகிறார்களோ என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் இடையே எழுந்தது. ஆனால் எடப்பாடி, தினகரனை அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள 1 சதவிகிதம் கூட சான்ஸ் இல்லை என்று இதை மறுத்தார். இதற்கு பதிலடி தந்த டிடிவி தினகரன், எடப்பாடி உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை. அதற்கு சான்ஸே இல்லை. திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமியை போல் காலையும் பிடிக்கமாட்டேன், அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது. அப்படி இருக்கும் போது அவர்களுடன் எப்படி கூட்டணி வைப்பேன், என்று டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

அமமுக
அப்படி என்றால் அதிமுகவின் மெகா கூட்டணியில் இருந்து அமமுக அவுட்டாகிவிட்டது. மீதம் இருப்பது அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக மட்டுமே. இதில் தேமுதிக சார்பாக பொருளாளர் பிரேமலதா இந்த கூட்டணி பற்றி எதுவுமே பேசவில்லை. அதிமுகவை பற்றி அவர் கண்டுகொள்ளவே இல்லை. கூட்டணி பற்றி வாயை திறக்காமல் அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் பாமகவும் எதுவும் பேசவில்லை. பாமக டாப் தலைவர்கள் யாரும் இதை பற்றி வாயே திறக்கவில்லை. ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போது அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. பாமக அதிமுக கூட்டணி அதிகாரபூர்வமாக முறிந்துவிட்டது. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களை ஒன்றாக எதிர்கொண்ட அதிமுக பாமக கூட்டணி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக முறிந்தது. பாமகவின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இதுதான் உதவும், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர், இந்த காரணத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாமக நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது .

கூட்டணி
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய போது, தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை எடப்பாடி "கண்ட்ரோல்" செய்யவில்லை என்று ராமதாஸ் வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருந்தார். கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவிற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. இதனால் தேர்தல் நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நிர்வாகிகளை சரியாக கட்டுப்படுத்த எடப்பாடிக்கு தெரியவில்லை. இதனால் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதில் பலன் இல்லை என்று கூறி ராமதாஸ் அதிமுகவுடனான கூட்டணியை விமர்சனம் செய்துள்ளார். எடப்பாடியை வெளிப்படையாக விமர்சனம் செய்துவிட்டு ராமதாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். இப்படிப்பட்ட ராமதாஸ் மீண்டும் அதிமுகவின் மெகா கூட்டணியில் இணைவாரா என்பது சந்தேகம். அப்படி இருக்கையில் அதிமுக + பாஜக மட்டும்தான் கூட்டணியில் மீதம் இருக்கிறது. அவர்கள் இருவரும் இணைந்தால் அது எப்படி மெகா கூட்டணி ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications