தமிழக அரசை நம்பும் ராகுல்.. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையில் முதல் ரியாக்ஷன் என்ன தெரியுமா? இதுதான்
சென்னை: சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி குற்றவாளிகளை தமிழக அரசு விரைவில் சட்டத்தின் முன்நிறுத்தும் என்று நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று மாலையில் அவர் தனது வீட்டருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

இந்த வேளையில் பைக்குகளில் ஜோமோட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்தது சென்றது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங் மீட்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அவரது கொலையை கண்டித்து நேற்று இரவே சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறி 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் அவரது தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு கொன்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கட்சி பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தர வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூலிக்கு கொல்லும் கும்பல்.. தமிழகத்தில் சாதாரணமாக நடமாடுறாங்க! ஆம்ஸ்ட்ராங் கொலையால் கொதித்த வைகோ
இந்நிலையில் தான் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகளை தமிழக அரசு விரைவில் சட்டத்தின் முன்நிறுத்தும் என்று நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின், ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications