மக்கள் ஆதரவு அதிகரிக்கும் போது.. எடப்பாடி பழனிசாமியை சீண்டும் அண்ணாமலை.. பாஜகவின் திட்டமே அதுதான்!
சென்னை: மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரிக்கும் நேரத்தில், பாஜக தரப்பில் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை கூறி சர்ச்சையை உருவாக்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனை பாஜக திட்டமிட்டே மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி அமைக்கப்பட்ட நாளில் இருந்தே பாஜக தரப்பில் கூட்டணி ஆட்சி என்று சொல்லப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று 3 முறை கூறிவிட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் அண்ணாமலை பேசுகையில், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றிக் கூற முடியும்? அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் பேசி முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் வார்த்தையை மாற்றிக் கூறும் இடத்தில் உள்ள நயினார் நாகேந்திரனும் அமைதி காக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு பயணம் தொடங்கியதில் இருந்து அந்த கட்சிக்கு மக்கள் மத்தியிலான செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கி இன்னும் இருப்பதற்கு எடுத்துக் காட்டாமக் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்பதற்காக அதிகளவில் மக்கள் கூடி வருகின்றனர்.
இதன் மூலமாக களம் திமுக vs அதிமுக என்று மாறி வந்தது. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் இன்னும் இருப்பதை எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் நிரூபித்திருப்பதோடு, கொங்கு மண்டலத்திலும் அதிமுகவின் செல்வாக்கை யாராலும் அசைக்க முடியாது என்றும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர். அதிமுக தொடர்ந்து அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறும் சூழலில், பாஜக மீண்டும் பிரச்சனையை கொடுக்க தொடங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பக்கம் லைம்லைட் திரும்பும் போதெல்லாம், பாஜக தரப்பில் மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் சந்திப்பு பயணத்திலும் எடப்பாடி பழனிசாமி பலமான கூட்டணி அமைக்கப்படும் என்று பேசி வருவது பாஜகவின் குடைச்சல் சரியே என்று சொல்வதை போல் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் கோவையில் தொடங்கிய போது இருந்த பாஜகவின் ஆதரவு, அடுத்தடுத்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அதிமுகவை தொடர்ச்சியாக சீண்டும் பணிகளில் அண்ணாமலை ஒரு பக்கமும், இது தாம் அமைத்த கூட்டணி அல்ல என்று மீண்டும் மீண்டும் பேசி வருவது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனால் அண்ணாமலையை வைத்து அதிமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதே பாஜகவின் திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கூட்டணி அமைந்த பின்னரும், அதிமுக உடனான கூட்டணி தனக்கு பிடிக்கவில்லை என்பதை அண்ணாமலை தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டே இருக்கிறார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி எந்த நேரத்தில் முறியும் என்றும் பேச்சு அரசியல் வட்டாரங்களில் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications