பள்ளிக்கரணையில் பன்னடுக்கு குடியிருப்பு கட்ட தடை விதிக்க கோரிய அதிமுக மனு தள்ளுபடி.. பின்னணி
சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அதிமுக சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளது..
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் வழக்கு தொடரப்பட்டிருத்து. இதேகோரிக்கையுடன், அறப்போர் இயக்கம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கும் வகையில், அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்தவிதமான புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. சதுப்பு நிலப்பகுதியில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகங்கள் கட்ட ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டுமானங்களால் சதுப்பு நிலத்தின் இயற்கைத்தன்மை அழிந்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் பெரும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடுகையில், ஆக்கிரமிப்பு அகற்றுதல்: சதுப்பு நிலப்பரப்பு தொடர்ந்து சுருங்கி வருவதால், ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்டெடுக்க வேண்டும். முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு இன்றி வழங்கப்பட்ட கட்டுமான அனுமதிகளைச் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். சதுப்பு நிலம் என்பது நகரின் நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய காரணி என்பதால், அங்கு வணிக ரீதியான திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்படட்து.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சதுப்பு நிலத்தை துல்லியமாக வரையறை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு, பிப்ரவரி 24-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள போது, உயர் நீதிமன்றத்தில் இணையான விசாரணை நடத்த முடியாது என்பதால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறிய நீதிபதிகள், அதிமுக நிர்வாகியும், அறப்போர் இயக்கமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications