மாமல்லபுரத்தில் "உட்கார்ந்திருந்த" பங்காரு அடிகளார்.. டக்னு திகைத்து போன மனைவி.. மேல்மருவத்தூர் குஷி
சென்னை: செவ்வாடை சித்தர் என்று பக்தர்களால் போற்றப்படும் "பங்காரு அடிகளார்" குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.. இது மேல்மருவத்தூர் பக்தர்களுக்கு ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார்.. 1977-ல் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியதுடன், கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையையும் ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார்..

மாதவிலக்கு: மாதவிலக்கு நாட்களிலும் தடையின்றி வழிபடலாம் என்று பங்காரு அடிகளார் அறிவித்திருந்தது, பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அன்று பெற்றிருந்தது.. அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூஜை செய்து வழிபட செய்த பங்காரு அடிகளாரின் இந்த ஆன்மீகப் புரட்சியானது, பல தரப்பினராலும் மிகவும் மதித்து போற்றப்பட்டது.
சிவப்பு ஆடை அணிந்து, சன்னியாசியாக, எளிமையான தோற்றத்துடன் பலரின் குறைகளையும், கஷ்டங்களையும், நோய்களையும் தீர்த்து வைக்க துவங்கியதால் நாடு முழுவதுமே பிரபலமானார் பங்காரு அடிகளார். மேல் மருவத்தூர் கோயிலுக்கு பெண்களின் வருகை இன்றுவரை அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்து வருகிறது..
வழிபாடு முறை: சபரிமலைக்கு பெண்கள் இருமுடி கட்டி செல்வதை போல, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குள்ளும் பெண்கள், ஆண்கள் என பலரும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி எடுத்து வந்து வழிபடும் முறை உருவானது, பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
அதேபோல, சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களிலும் மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் குவிவதும், பங்காரு அடிகளாரிடம் ஆசி பெறுவதும் வழக்கமாக இருந்தது.. பக்தர்களுடன் நெருக்கமாக பழகியதாலேயே நாளடைவில் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்.
பள்ளிகள்: ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களையும் துவங்கினார்.. இந்த அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். உடல்நலம் குன்றி, கடந்த அக்டோபர் மாதத்தில், மாரடைப்பால், 82 வயதில் மரணமடைந்தார் பங்காரு அடிகளார்..
இந்நிலையில், "செவ்வாடை சித்தர்" பங்காரு அடிகளாருக்கு கற்சிலை தயாராகி வருகிறது.. மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் உள்ள "ஆர்ட் ஸ்டுடியோ" என்ற சிற்பக்கூடத்தில், பங்காரு அடிகளாரின் கற்சிலை 450 கிலோ எடை கொண்ட கருங்கல்லில், 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது..
பங்களாரு அடிகளார் உட்கார்ந்திருப்பதை போல தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.. இதை சிற்பி முருகன் என்பவர் 4பேருடன் இணைந்து 3 மாதங்களாக செதுக்கினர்.. இந்த சிலைக்கு இறுதி வடிவமும் தற்போது கொடுத்துவிட்டார்.
மனைவி லட்சுமி: மேல்மருவத்தூருக்கு இந்த சிலையை அனுப்ப தயாராக வைத்திருக்கிறார்கள். இந்த சிலையைதான், நேரில் பார்க்க சென்றுள்ளார் பங்காரு அடிகளாரின் மனைவியும், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவியுமான லட்சுமி அம்மாள்..
சிலையை பார்த்ததுமே ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்து நின்றார்.. பட்டறை பணியாளர்கள் அந்த சிலையை தண்ணீர் விட்டு கழுவி காண்பித்தபோது, லட்சுமி அம்மாள் கண்கலங்கி அழுதுவிட்டார்.. அச்சு அசல் பங்காரு அடிகளார் போலவே அச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.. பிறகு சிலைக்கு பூஜைகள் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் லட்சுமி அம்மாள்..
செவ்வாடை: இந்த சிலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் வைத்து, வழிபாடு செய்ய போகிறார்களாம். பங்காரு அடிகளார் எப்போதுமே செவ்வாடையை உடுத்தியபடியே காணப்படுவார். அதுபோலவே, இந்த கற்சிலையும் செவ்வாடை உடுத்தியே, பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, மேல்மருவத்தூர் அம்மாவை காண, பக்தர்களும் ஆர்வமாய் காத்திருக்கிறார்கள். இதையடுத்து, பக்தர்கள் இந்த செவ்வாடை சிலையிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications