பாலியல் புகார்! போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு.. முகத்தை மூடிக்கொண்டு சென்ற "பிக்பாஸ்" விக்ரமன்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் மீதான விசாரணைக்காக விக்ரமன் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் விக்ரமன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சர்ச்சையில் சிக்கினார். அதாவது, கடந்த சில மாதங்களாகவே, விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார்.

இதேபோல் இளம்பெண்ணுடன் விக்ரமன் உரையாடிய வாட்ஸ் அப் உரையாடல்களும் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இதற்கு விக்ரமன் தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும் நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். அவர் என்னை காதலிப்பதாக சொல்லி வந்தார். சட்டரீதியாக திருமணமும் செய்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். என்னை காதலிப்பதாக சொல்லியே ரூ 13.7 லட்சம் பணம் வாங்கினார்.
அதில் ரூ 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். மீதி ரூ 1.7 லட்சம் திருப்பி தர வேண்டும். என்னை காதலிப்பதாக சொல்லி மோசடி செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்திருந்தார் .
ஆனால் இந்த புகாருக்கு விக்ரமன் மறுப்பு தெரிவித்திருந்தார். பெண் அளித்த புகாரின் பேரில், விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வன்கொடுமை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக விக்ரமன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது 13 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிந்து வெளியே வந்த விக்ரமன், அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்ததும் முகத்தை மூடிக்கொண்டு காரில் வேகமாக சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications