"விட்றாதீங்க ப்ளீஸ்".. ஐஏஎஸ் இறையன்புவை.. ஸ்ட்ரெயிட்டா சென்று சந்தித்த தமிமுன் அன்சாரி.. என்ன காரணம்
தமிழக தலைமை செயலாளரை தமிமுன் அன்சாரி சந்தித்து மனு கொடுத்துள்ளார்
சென்னை: வன்முறையை தூண்டும் ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாட்டில் அனுமதிக்ககூடாது, அதை தடுக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்தியா சுதந்திர தினம் 75வது ஆண்டு , அம்பேத்கர் பிறந்த தின நூற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வார்னிங்
பேரணிக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு கோர்ட் உத்தரவிடப்பட்ட நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. மதக் கலவரத்திற்கு வித்திடும் இதுபோன்ற பேரணிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என பல அரசியல் கட்சித் தலைவர்களும் எச்சரித்து வருகின்றனர். அந்தவகையில், மனிதநேய ஜனநாயக கட்சியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது..

வன்முறை
வன்முறையை தூண்டும் ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாட்டில் அனுமதிக்ககூடாது என்றும், அதை தடுக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை விடுத்துள்ளதுடன், தலைமைச் செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்தும் மனு அளித்துள்ளார்..

மேல்முறையீடு
அதில், "காந்தி பிறந்த அக்டோபர் 2 அன்று தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த உயர் நீதிமன்றத்தின் சில நிபந்தனைகளுடன் RSS அமைப்பு அனுமதி பெற்றிருக்கிறது. இது தமிழகத்தில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்" என்று தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார். இறையன்புவை சந்தித்துவிட்டு வெளியே வந்த தமீமுன் அன்சாரி, செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்..

பதைபதைப்பு
அப்போது, "தமிழ்நாட்டில் சமூக ஒற்றுமையை கெடுக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது.. வன்முறையில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகள், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்... தலைமை செயலாளரை சந்தித்து மனு தரும்போது, கட்சியின் மாநிலச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில துணைச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, அசாருதீன், மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் பஷீர் அகமது ஆகியோர் உடனிருந்தனர். நாளுக்கு நாள் இந்த பேரணிக்கு எதிராக தொடர்ந்து நெருக்கடிகளும், எதிர்ப்புகளும் பெருகி வருவதால், இதன் முடிவு என்னவாக இருக்க போகிறது என்ற பதைபதைப்பு மக்களிடம் ஒட்டிக் கொண்டுள்ளது..!












Click it and Unblock the Notifications