1948இல் பீகார் நம்பர்1 மாநிலம்! இன்று தமிழ்நாடு நம்பர் 2! எப்படி வந்தது இந்த வளர்ச்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு இந்திய அளவில் எப்படி 2வது இடத்திற்கு முன்னேறியது என்பதை ஆய்வு பூர்வமாக விளக்கம் தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் அளித்துள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் கலந்து கொண்டு பேசிய அவர், நமது மாநிலம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாக இயங்கி வருபவர் தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம். தமிழ்நாடு எந்தளவில் துறை ரீதியாக வளர்ந்துள்ளது என்பதைப் புள்ளிவிவரத்துடன் பேசி வருபவர். அவர் சமீபத்தில் சிவில் சர்வீஸ் எழுத உள்ள மாணவர்கள் மத்தியில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு விவாதித்து வருகிறார். அதனடிப்படையில் அவர் தமிழ்நாடு எப்படி இந்திய அளவில் ஜிடிபியில் 2வது இடத்திற்கு முன்னேறியது என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

Tamil Nadu Suresh Sambandam

இது தொடர்பான உரையாடலில் சுரேஷ் சம்பந்தம் பேசுகையில், “கடந்த 2018இல் இருந்து சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். அப்போது திடீரென்று ஒருவர் வந்த 'என்ன பெருசா வளர்ந்துவிட்டோம் என்றே சொல்லி வருகிறீர்கள். தமிழ்நாடு எப்போதுமே வளர்ந்த மாநிலம்தான்.

ஏதோ கடந்த 50 ஆண்டுகளில் ஏதோ வளர்ந்த மாதிரி ஒரு கதையைக் கட்டமைக்கிறீர்கள்?’ என்று பின்னூட்டம் போட்டார். உடனே இது என்ன உண்மையா என்று தேட ஆரம்பித்தேன். 1950களில் இருந்து மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் ஜிடிபி அளவு எப்படி உள்ளது எனத் தேடிப் பார்த்தேன். அன்று தமிழ்நாடு தனி மாநிலமாக இல்லை. மெட்ராஸ் பிரசிடென்சிதான். அதற்குள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஒடிசா எல்லாமே வரும். அப்படியான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தரவரிசை படி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின், அதாவது மெட்ராஸ் பிரசிடென்சியின் ஜிடிபி என்பது கடைசி இடத்திலிருந்து 2வது இடத்திலிருந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பீகார் தான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருந்துள்ளது. இந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டு டாப் 2வது மாநிலமாக ஜிடிபியில் உள்ளது. இது எவ்வளவு பெரிய மாற்றம்? இதற்கு என்ன காரணம்? பொருளாதார வளர்ச்சியை நாம் 4 விதமாகப் பிரிக்கலாம். முதலில் இயற்கை கனிமவளங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம்.

அதாவது நிலக்கரி, எண்ணெய் வளம் போன்றவை இதில் அடங்கும். அந்தக் காலத்தில் பீகார் ஏன் முதல் மாநிலமாக இருந்தது என்றால், அன்றைய பொருளாதாரம் என்பது இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அப்படிப் பார்த்தால் நிறைய நிலக்கரி வளம் பீகாரில்தான் இருந்தது. அதைவைத்து அம்மாநிலம் முதல் இடத்திலிருந்தது. இரண்டாவது பொருளாதாரத்தை எப்படிப் பிரித்தார்கள் ? வேளாண்மையை மையமாக வைத்துப் பிரித்தார்கள். இதில் சாகுபடி, விவசாய உற்பத்தி எல்லாம் அடங்கிவிடும். மூன்றாவதுதான் தொழில்துறை சார்ந்த பொருளாதாரம். நான்காவதாக வருவதுதான் அறிவுசார் பொருளாதாரம்.

தமிழ்நாடு சுதந்தரம் பெற்ற காலத்தில் கடைசி 2வது இடத்திலிருந்தது இல்லையா? அது எப்படி டாப் 2வது இடத்திற்கு முன்னேறியது? நம்மிடம் இயற்கை சார்ந்த பொருளாதாரம் பெரிய அளவில் இல்லை. வேளாண்மை இருக்கிறதா என்றால்? பெரிதாக இல்லை. தமிழ்நாடுதான் அடுத்த மாநிலத்திலிருந்து நீர் கேட்டுப் போராடி வருகிறதே ? அப்புறம் எப்படி விவசாயம் செழிக்கும்?

நம்மிடம் இருந்ததே மனித வளம் தான். ஆகவே ஒரே அடியாக ஒரு பாய்ச்சலை நிகழ்த்த தொழில்துறையை வேகமாக முன்னேற்றினோம். மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நிறைய சிப்காட் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய அளவில் முதன்முதலாக ஐடி தொழில்நுட்ப அறிவு சார்ந்து ஒரு கொள்கை திட்டத்தைத் தமிழ்நாடுதான் உருவாக்கியது. அறிவை வைத்து பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம். மத்திய அரசே செய்யவில்லை. தமிழ்நாடுதான் போட்டது. உடனே டைடல் பார்க் திறக்கப்பட்டது. பெங்களூரில் அப்போது ஐடி பார்க் என்பது வரவே இல்லை.

ஆக, தொழில்துறை பொருளாதாரமும் அறிவுசார் பொருளாதாரமும் இணைந்துதான் தமிழ்நாட்டை அப்படியே டாப் 2வது இடத்திற்குக் கொண்டு சென்றது. தமிழ்நாடு எங்கு எல்லாம் முன்னேறியுள்ளது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். 'நீட்’ விசயத்தை எடுத்துக் கொள்வோம். கல்வி மாநிலப் பட்டியலில் இல்லை. பொதுப் பட்டியலில் உள்ளது.

அப்படி கல்வி உரிமை நம்மிடம் இல்லாத போதே தமிழ்நாடு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியைத் திறந்துள்ளது. அப்படி நாம் மாநில உட்கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். அது மத்திய அரசு செய்து தரவில்லை. நம் மாநிலத்தின் வரிப்பணம். அப்படி உள்ளபோது 'நீட்’ பரீட்சையை எழுதி, வேறு எந்த மாநிலத்திலிருந்தோ இங்கு வந்து டாக்டர் படித்துவிட்டுச் செல்கிறான். அதற்கு அவனது மாநிலம் எந்த உதவியையும் செய்து தரவில்லை. நம் உழைப்பு, வேறு மாநிலத்திற்குப் பயனளிக்கிறது.

மேலும் கிராமத்தில் படிக்கும் மாணவரும் நகரத்தில் படிக்கும் மாணவரின் அறிவு திறமையும் ஒன்று அல்ல. அதில் போதாமை உள்ளது. ஆகவே, இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு வைப்பது எப்படிச் சரி? ஏழை மாணவன் உயர்வதற்கு அவனுக்கு சில சலுகைகளை அரசு தரவேண்டும். அதைப்போல பட்டியலின மாணவர்களுக்கு என்று சமூக பின்புலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கல்வி வழங்க வேண்டும். அது நீட் தேர்வில் இல்லை. எடுத்த உடனேயே 2 லட்சம் பணம் கட்ட சொல்கிறார்கள். எப்படி ஏழை மாணவனால் மருத்துவம் படிக்க முடியும்? அதனால்தான் நீட் வேண்டாம் என்கிறோம்.

இந்தியா முன்னேற வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள மாடலை பின்பற்ற வேண்டும். இந்தியா மாடல் என்று ஒன்றை திணிக்கக் கூடாது. முதலில் ஒன்றிய அரசு ராணுவம், பொருளாதாரம், பண கொள்கை, வெளியுறவுக் கொள்ளை ஆகியவற்றைத் தவிர மற்ற உரிமைகளையும் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாநில அரசுக்குப் பிரித்து வழங்க வேண்டும். அந்த உரிமை மாநில அரசுடன் நிற்கக் கூடாது. பஞ்சாயத்து அளவில் பிரித்து வழங்கப்பட்ட வேண்டும். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது” என்று பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+