பைசன் படம் பார்த்த திருமாவளவன்.. 1990-களில் தூத்துக்குடியில் நிலவிய சமூக சிக்கல்களை சொல்வதாக பேச்சு!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் படத்தினை பார்த்துள்ளார். பின்னர் பேசிய அவர், 1990 காலக்கட்டத்தில் தூத்துக்குடியில் நிலவிய சமூக சிக்கல்களை மையமாக கொண்டு பைசன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளதாக கூறினார். மேலும் பைசன் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அபாரமாக நடித்துள்ளார் என்றும் பாராட்டுள்ளார்.
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த படம் பைசன். தீபாவளி விருந்தாக இந்த படம் திரைக்கு வந்துள்ளது.

பைசன் படம் பார்த்த திருமாவளவன்
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் ஹரீஸ் கல்யாணின் டீசல் படங்களோடு பைசன் படமும் வெளியாகி இருக்கிறது. டியூட் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளிலேயே ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பைசன் படத்திற்கும் மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
கபடி வீரர் மணத்தி கணேசனின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டே இந்த பைசன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பைசன் படம் பார்த்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் கூறியதாவது:
"காட்சிகள் ஒவ்வொன்றும் ஆக்கிரமிக்கிறது"
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள பைசன் படத்தினை இன்று பார்ப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மாரி செல்வராஜுக்கு இது 5வது படம். ஒவ்வொரு படமும் ஒரு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாரி செல்வராஜ் இன்னும் உயரமான இடத்துக்கு செல்வார் என்ற அளவுக்கு இந்த படமானது அமைந்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்த படத்தில் கையாண்டு இருக்கிற யுக்திகள், வசனங்கள், காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை ஆக்கிரமிக்கிறது, ஆளுமை செய்கிறது. 1990-களில் தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடியில் நிலவிய சமூக சிக்கல்களை மையமாக கொண்டு, வரலாற்று உண்மைகளை கருப்பொருளாக கொண்டு, ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை படமாக்கியுள்ளார்.
"அர்ஜூனா விருது பெற்றவர்"
மணத்தி கணேசன் என்ற அந்த வீரர் தேசிய விருது பெற்றவர். இந்தியாவின் மிக உயரிய விருதான அர்ஜூனா விருதை பெற்றுள்ளார். இன்றும் உயிரோடு இருக்கிறார். கடுமையான சாதிய சிக்கல்கள் நிறைந்த சமூக கட்டமைப்பில், தூத்துக்குடி மாவட்ட சூழலில் அவர் எத்தகைய நெருக்கடியெல்லாம் எதிர்கொண்டு, மாநில அளவிலும், தேசிய அளவிலும் வீரராக தேர்வு செய்யப்பட்டு, ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டிலும் பங்கு பெற்று, பதக்கம் வென்றது தான் இந்த பைசன் படம்.
"துருவ் அபாரமாக நடித்துள்ளார்"
அவர் எதிர்கொண்ட சிக்கல்களை மிக கவனமாக எடுத்துரைத்துள்ளார். இன்றும் தென் மாவட்டங்களில் நிலவுகின்ற சாதி அடிப்படையிலான முரண்களை கையாளும் போது எத்தகைய எதிர்வினைகள், எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் உணர்ந்தவர் - அந்த மாவட்டத்திலிருந்தே உருவாகியுள்ளார் மாரி செல்வராஜ். மணத்தி கணேசன் கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் அபாரமாக நடித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications