20 தொகுதிகள் பாஜக; மத்திய அமைச்சர் கனவில் அண்ணாமலை! பாமக, தேமுதிக நிலை?
சென்னை: 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முடிவு செய்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் மீண்டும் மோடி பிரதமராக வர வாய்ப்புகள் உள்ளதாக பொதுவாக ஒரு கருத்து பரப்பப்படுகிறது.

அதற்குக் காரணம், காங்கிரஸ் பலமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. தென் இந்தியாவில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இல்லை என்றாலும், ஹிந்தி பெல்ட் அக்கட்சிக்கு மிகமிக சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் நிலை பெரிய அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பல அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக அண்ணாமலை பாஜக தலைமைக்கு வந்த பிறகு ஊடகங்களில் பாஜக பற்றிய செய்திகள் அதிகம் அடிபடுகின்றன. ஆனால், களத்தில் அந்தளவுக்கு அக்கட்சிக்கு நிர்வாகிகள் இல்லை என்றும் ஒரு கருத்து உலவி வருகிறது.
ஆனால், பாஜக கடந்த 10 ஆண்டுகளைவிட இப்போது வளர்ந்துள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது எந்த அதிகார பலமும் அரசியல் பலமும் இல்லாத நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருப்பதை கடந்தகால தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டி உள்ளன. ஆகவே, இந்தத் தேர்தலில் பாஜகவின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளதைப் போலவே நாம் தமிழர் கட்சியின் எதிர்காலமும் கணிக்கப்பட உள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 30% வாக்குகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் பாஜக சட்டமன்றத்திற்குள் நுழைய முடிந்தது.
ஆனால், இப்போது அவ்வளவு பெரிய கட்சியின் துணையை இழந்துள்ளது பாஜக. அது மிகப்பெரிய இழப்புதான். இது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் கூட, செல்வாக்கு மிக்க கட்சியின் துணை பாஜகவுக்கு கட்டாயம் தேவை.

அந்தப் பலத்தை ஈடுசெய்ய அண்ணாமலை, இரண்டாம் நிலையில் உள்ள கட்சிகளோடு, சில உதிரி கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை அமைக்க உள்ளார். அந்தக் கூட்டணி ஏறக்குறைய இறுதி வடிவத்தை எட்டி விட்டது என்று சொல்கிறார்கள்.
இந்த மாதம் 18 ஆம் தேதி அன்று அண்ணாமலையில் என் மண் என் மக்கள் யாத்திரை திருப்பூரில் முடிவடைய உள்ளது. அதன் நிறைவு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த தலைமை உத்தரவிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதி என்றும் சொல்கிறார்கள்.

அந்த யாத்திரையே மக்களவைத் தேர்தல் 2024 ஐ மனதில் வைத்துதான் நடத்தப்பட்டது. ஆகவே, மோடி கட்டாயம் கலந்துக் கொள்வார் என்றும் அதில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில்தான் பாஜக தமிழ்நாட்டில் மொத்தம் 20 தொகுதிகளில் களம் இறங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அந்த அளவுக்குப் பலம் பொருந்திய கட்சி இல்லை பாஜக.

ஆனால், மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதால் இதை சாதித்துவிடலாம் என கணக்குப் போட்டுள்ளார் அண்ணாமலை. அதில் மிகப்பெரிய விநோதம் என்னவென்றால், பாஜகவைவிட வடதமிழ்நாட்டில் செல்வாக்கு நிறைந்த பாமகவுக்கு பாஜக கூட்டணியில் வெறும் 7 இடங்களைத்தான் அண்ணாமலை ஒதுக்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டன. அதுவே அக்கட்சியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசி நேரம் வரை இழுபறியில் இருந்தார்கள். பாமக மறைமுகமாக அதிருப்தியை வெளிப்படுத்தியது.
குறிப்பாக, தங்களைவிட சின்ன கட்சியான தேமுதிகவுக்கு 4 சீட்டுகள் தரப்பட்டது எப்படி என சலசலப்புகள் எழுந்தன. ஏற்கெனவே தேமுதிகவுக்கும் பாமகவுக்கும் வட தமிழகத்தில் ஒரு மோதல் போக்கு இருந்தது.

அதை மீறி அக்கட்சியுடன் தேர்தல் பணியை பாமக செய்யுமா என சந்தேகம் வலுத்த போதுதான் விஜயகாந்த் வீட்டிற்கே பாமக தலைவர்கள் சென்று தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்பி இருந்தார்கள்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தபோது வெறும் 5 தொகுதிகள்தான் தரப்பட்டது. சொல்லப் போனால், தேமுதிகவைவிட ஒரு தொகுதிதான் அதிகம்.

இதற்கு மாறாக 2024 தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அந்தச் செய்தி இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் இந்தத் தகவல் சக கூட்டணிக் கட்சிகளையே அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாக சொல்கிறார்கள்.
பாஜகவுக்கு இன்றும் கூட தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு பல தொகுதிகளில் நிர்வாகிகள் இல்லை. கட்சி சார்பான தேர்தல் பொறுப்பாளர்களை தேடிப் பிடிப்பதற்கே அக்கட்சி திண்டாடி வருகிறது. அப்படி இருக்கும் போது 20 தொகுதிகள் என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்கிறது அதிமுக வட்டாரம்.
அது சரி, பாஜக போட்டி போட உள்ள அந்த 20 தொகுதிகள் எவை?

தமிழ்நாட்டின் கடைக்கோடி தொகுதியான தூத்துக்குடியில் இருந்து தொடங்குவோம். இந்தத் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன் நிறுத்தப்படலாம் எனப் பேச்சு அடிப்படுகிறது.
அதே சமயத்தில் அவருக்குதான் கவர்னர் அளவுக்கு கட்சி மரியாதை செலுத்திவிட்டதே? மீண்டும் மீண்டும் அவரையே முன்னிலைப்படுத்த வேண்டுமா? என அண்ணாமலை வாதிடுகிறாராம்.
அதற்குப் பதிலாக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால், அது கட்சியை மேலும் வலுவாக்கும் என்ற கருத்தை முன்வைத்து வருகிறாராம். ஆகவே அந்தத் தொகுதியில் சசிகலா புஷ்பா நிறுத்தப்படலாம் என்றும் சொல்கிறார்கள். அவரும் அதற்கானப் பணிகளை செய்து வருகிறார்.
சசிகலா புஷ்பா மனதில் இன்னொரு விசயமும் ஓடிக்கொண்டுள்ளதாக சொல்கிறார்கள். கனிமொழி ஆளும் கட்சி பலத்துடன் உள்ளார். அந்தத் தொகுதியில் அவருக்கு செல்வாக்கும் உள்ளது.
மலையோடு மோதி மண்டை உடைவதைவிட நெல்லைக்குப் போய் போட்டியிடலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் அளித்த யோசனையைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அடுத்து கன்னியாகுமரி. அது பாஜகவுக்கு சாதகமான தொகுதி. அங்கே வேறு யார் நிற்பார்கள்? பொன் ராதாகிருஷ்ணன்தான். நெல்லையில் நயினார் நாகேந்திரன் நிற்கலாம். அப்படி இல்லை என்றால் அவரது மகன் நிறுத்தப்படலாம். வாரிசு அரசியலை எதிர்த்து பேசும் போது அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமா என அண்ணாமலை கல்லை போடுவதாகவும் சொல்கிறார்கள்.
சிதம்பரம் விசிகவின் கோட்டை. தனித்தொகுதியும் கூட. ஆகவே அங்கே திருமாவளவன் நிற்கிறார். அவரை எதிர்க்க பலம் பொருந்திய நபர் தேவை. அதற்காக அங்கே தடா பெரியசாமியை களம் இறக்குகிறது பாஜக. விருதுநகரில் ராம சீனிவாசன் போட்டியிடலாம் என்கிறார்கள்.
கிருஷ்ணகிரியில் கேஎஸ் நரேந்திரன். இவர் கட்சியில் செல்வாக்கு உள்ளவர். மாநிலத் தலைமை மாறினாலும் தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளவர் இவர். ஆகவே அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கூடவே நரசிம்மன் பெயரும் அடிப்படுகிறது. இவர் ஒரு முன்னாள் காங்கிரஸ்காரர். பாஜகவை நம்பி வந்தவர், ஆகவே அவரையும் கூல் செய்ய வேண்டும் என தலைமை யோசிக்கிறதாம்.
ஈரோடு கேபி ராமலிங்கத்திற்கு ஒதுக்கப்படலாம். அவர் திமுகவில் செல்லாக்கு உள்ள தலைவராக இருந்தவர். ஆகவே, அந்தத் தொகுதியை உடைத்துக் காட்டுவார் என்கிறார்கள்.
சேலத்தில் ஜி.கே.நாகராஜனும், திருப்பூரில் கனகசபாபதியும், நீலகிரியில் எல்.முருகனும், வடசென்னையில் பால் கனகராஜும், மத்திய சென்னையில் குஷ்புவும் தென் சென்னையில் கரு நாகராஜனும் போட்டிப் போட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் ஹைலைட் ஆக அண்ணாமலையே கோவையில் போட்டிப் போடலாம் என முடிவெடுத்துள்ளாராம். ஏனெனில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய அவருக்குப் பதவி தேவை என நம்புகிறாராம். பாஜக இந்தியா அளவில் வெற்றிபெற்றால், மத்திய அமைச்சராகவும் ஆகலாம் எனக் கனவு காண்கிறாராம்.
அவருக்கு இந்தத் தேர்தலை விட்டால், மத்திய மந்திரி ஆகும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பது சந்தேகம். ஆகவே அவரும் ரேஸுக்கு தயாராகி விடார் என்கிறது அரசியல் வட்டாரம்.
இது போக அமமுக மற்றும் ஒபிஎஸ் அணிக்கு 7 இடங்களும் புதிய நீதிக்கட்சி, ஜான்பாண்டியன் மற்றும் ஐஜேகேவுக்கு தலா 1 இடமும் தேமுதிகவுக்கு 2 இடங்களும் பாஜக கூட்டணி ஒதுக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications