அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை.. தமிழகம் வருவது எப்போது? வெளியான தகவல்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பை மேற்கொள்வதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் லண்டன் சென்றார். லண்டனில் இருந்தபடி அவ்வப்போது, தனது எக்ஸ் தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்த அண்ணாமலை வரும் 28 ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை தமிழகம் திரும்ப இருப்பதால் தமிழக பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி லண்டன் சென்ற அண்னமாலை, 3 மாத காலம் லண்டனில் தங்கியிருந்து அரசியல் படிப்பை படிக்க இருப்பதாக பாஜக தெரிவித்தது. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படிப்பு மேற்கொண்டார்.

அண்ணாமலை லண்டனில் தங்கியிருந்த காலத்தில் தமிழகத்தில் கட்சி செயல்பாடுக்ளை கவனித்துள்ள கொள்ள ஒருங்கிணைப்பு குழுவை தேசிய தலைமை அமைத்தது. ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. லண்டனில் இருந்தபடி அவ்வப்போது, தனது எக்ஸ் தளத்தில் தனது கருத்துக்களை அண்ணாமலை பதிவிட்டு வந்தார். நந்தன் மற்றும் அமரன் படத்தை லண்டனில் இருந்து பார்த்த அண்ணாமலை அதுதொடர்பான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.
அதேபோல, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். விஜய் கட்சி ஆரம்பித்து தனது மாநாட்டில் பேசுகையில், இருமொழிக் கொள்கை குறித்து பேசினார். இது தொடர்பாக மறைமுகமாக விமர்சித்து பேசிய அண்ணாமலை, "இரு மொழிக்கொள்கை மட்டும் தான் என புதியதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் சொல்கிறார்கள். 60 ஆண்டுகளாக இருக்கும் கட்சியும் அதைத்தான் சொல்கிறது.
மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர மாட்டோம் என்று சொல்வது அகங்காரம்" என்று கூறியிருந்தார். தீபாவளி நாளில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். இது போல ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகள் தவிர வேறு எதுவும் பெரிதாக அண்ணாமலை அரசியல் கருத்துக்கள் கூறவில்லை. தற்போது லண்டனில் மேற்படிப்பு முடிந்து வரும் வரும் 28 ஆம் தேதி அண்ணாமலை தமிழகம் திரும்ப உள்ளார்.
29 ஆம் தேதி பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார். அதற்கு அடுத்த நாள் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் விஜய் கட்சி தொடங்கியது வரை என தமிழக அரசியலில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு அதிரடிகள் நடைபெற்றுள்ளன.
இத்தகைய அதிரடி அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் அண்ணாமலை தமிழகம் திரும்ப இருப்பதால் தமிழக பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் அண்ணாமலை தீவிர சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications