அப்செட்டான ‘கங்கா’.. கூண்டோடு அதிமுகவுக்கு ‘ஜம்ப்’! பெண்களுக்கு பாஜகவில் மதிப்பே இல்லை.. பரபர புகார்
பாஜக பெண் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளது அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர், செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் நிர்வாகிகள் இணைவது தொடர்வதால் அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்கிறது.
கட்சி தாவல் காரணமாக அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து கட்சி தாவல் தொடர்வது அண்ணாமலைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை மீது அதிருப்தி
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்களை மதிப்பதில்லை என்றும், உழைக்கும் நிர்வாகிகளுக்கு பதவி கொடுப்பதில்லை என்றும், அண்ணாமலை கட்சி நலனை விட தன்னையே முன்னிறுத்திக் கொள்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில், தமிழ்நாடு பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, பலரும் கட்சியில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

அண்ணாமலை கோபம்
பாஜகவினர் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்து வருவது அண்ணாமலைக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், அப்படி ஒரு சமரசம் செய்து தலைவர் பதவியில் நீடிக்க அவசியம் இல்லை என்றும் பேசினார்.

பாஜக நிர்வாகிகள்
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் சின்னையா, அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த நிர்வாகிகளை அதிமுகவினர் வரவேற்றனர். பாஜகவினர் அடுத்தடுத்து அதிமுகவிற்கு செல்வது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களை மதிக்கும் கட்சி
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கங்காதேவி, பாஜக தலைமை மீதான அதிருப்தி காரணமாகவும், கட்சிக்காக உழைக்கும் பெண்களுக்கு பாஜகவில் உரிய மரியாதை இல்லாத காரணத்தினாலும், அக்கட்சியில் இருந்து வெளியேறி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பெண்களை மதிக்கக்கூடிய கட்சியாக அதிமுக இருப்பதாகவும், பாஜகவில் இருந்து இன்னும் பலர் அதிமுகவில் இணைய ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அண்ணாமலை ஏற்கனவே அதிமுக மீது ஆத்திரத்தில் இருக்கும் நிலையில், மீண்டும் பாஜகவினர் அதிமுகவில் இணைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications