“கைது பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து பின்வாங்க மாட்டோம்".. தமிழிசை கைதால் பொங்கி எழுந்த அண்ணாமலை!
சென்னை: தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப் போவதில்லை, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

தமிழிசை கைது
அப்போது, காவல்துறையினர், கையெழுத்து இயக்கம் நடத்த முன் அனுமதி பெறவில்லை உடனடியாக இங்கிருந்து புறப்பட வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, கையெழுத்து இயக்கத்துக்கு காவல்துறை முன் அனுமதி பெறாத காரணத்தினால் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் மீதான கைது நடவடிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கடும் கண்டனம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழ்நாடு பாஜக சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும்.
கைது பூச்சாண்டிக்கெல்லாம் பயமில்லை
இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே?
தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக கையெழுத்து இயக்கம்
தமிழக பாஜக சார்பில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதனை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். இந்நிலையில், இன்று சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை கைது செய்யப்பட்டார்.
போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை, "சாமானிய மக்களிடமே கையெழுத்து வாங்குகிறோம். இதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும். என்னை ஏன் தீவிரவாதி போல போலீசார் சுற்றி உள்ளனர் என்பது எனக்கு புரியவில்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications