கோயம்பேடு டூ கிளாம்பாக்கம்.. ஒரே குழப்பமா இருக்கே? பொங்கலுக்குள்ள விடை தெரியுமா? அலறவிடும் ஆம்னி பஸ்
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.
பெரிதும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டினை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை இந்த பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருக்கிறது.. "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயருடன் மக்கள் பயன்பாட்டிற்கும் இன்று முதல் வந்துள்ளது..
பஸ் முனையம்: இந்த பஸ் முனையத்தால், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பயணிகள் பயணிக்க முடியும்... இதுகுறித்து சிஎம்டிஏ ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது..

அதில், "SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு செல்லும் வகையில் பேருந்து செயல்பாடுகள் மாற்றப்பட உள்ளது.
SETC மற்றும் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ்களின் செயல்பாடுகள் உடனடி நடைமுறையுடன் தொடங்கும், அதேநேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும்" என்று அறிவித்திருந்தது.
பஸ் ஸ்டாண்டு: இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மட்டுமல்லாமல், தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்பட உள்ளன. முக்கியமாக, தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
அந்தவகையில், 850 ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும், அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்குள் வராமல் கிளாம்பாக்கத்தோடு நின்றுவிடும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஆம்னி பஸ்கள்: ஆனால், இந்த பொங்கலுக்கு ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தே செல்லும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்பழகன் ஒரு விளக்கமளித்துள்ளார்.
அதில், "கிளாம்பாக்கத்தில் இன்று புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டாலும், ஒரு சில வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. அதனால் உடனே ஆம்னிகளை அங்கிருந்து இயக்க முடியாது.. அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பிறகே, கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க முடியும்.
ஆம்னி பேருந்துகள்: முழுமையான பணிகள் முடியும் வரை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும்..
அதேபோல தென் மாவட்ட பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து, பிறகு, அங்கிருந்து கோயம்பேடு நிலையத்திற்கு வந்து சேரும்" என்று தெரிவித்துள்ளார். இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications