"அப்ப நான் என்ன பண்ணட்டும்".. பன்னீர்செல்வம் இப்படி கேட்டதுமே.. பதறிய எடப்பாடி டீம்.. இதென்ன புதுஸ்ஸா
சென்னை:ஓபிஎஸ் அடுத்த லெவல் அரசியலுக்கு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.. நேரடி விசாரணைக்கு வருவதாக தெரிவித்திருப்பதே, கிட்டத்தட்ட ஒரு சவால் போல பார்க்கப்பட்டு வருகிறது..!!!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஹைகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர்.. அதன்படி நேற்றைய தினம், ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இரு நீதிபதிகள் தொடங்கி நடந்தது.

பெஞ்ச் கேள்வி
எனினும், எந்தவிதமான உத்தரவையும் நேற்றைய தினம் நீதிபதிகள் பிறப்பிக்காத நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.. ஆனால், நேற்றைய தினம், ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. அந்தவகையில், ஓபிஎஸ் புதுவிதமான அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. தனி நீதிபதி முன்பு நடந்த விசாரணை குறித்து ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது..

விதிமீறல்
குறிப்பாக, "என்னை கட்சியிலிருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்திருக்கிறார். தனி நீதிபதி முன்பு நடந்த விசாரணையின்போது தன்னை கட்சியிலிருந்து நீக்கியது தவறு என்றால், அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும்? எனவே, இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. கட்சியில் நீக்கம் தவறு என்று கூறிய தனிநீதிபதி, தீர்மானத்தை ரத்து செய்யவில்லை. அதனால், குறைந்தபட்சம் இடைக்காலமாக மீண்டும் கட்சியில் சேர்க்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ கூறவில்லை. எனவே, அந்த பதவிகள் காலாவதியாகவில்லை என்கின்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

காலாவதி
இதையடுத்து நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியை ஏன் அணுகவில்லை என்று கேட்டதுடன், குறித்த காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்,, இதற்கு ஓபிஎஸ் தரப்பில், "குறித்த காலத்திற்குள் முடிப்பதாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக நீடித்தால் தன்னுடைய நிலை என்ன?"என்று கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர், "ஓபிஎஸ்ஸுக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை என்று அதிமுக சார்பில் வாதிடப்படவும், "எங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது.. இடைக்கால நிவாரணம் அளித்திருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும்".. என்று ஓபிஎஸ் தரப்பு பதிலடி தந்தது..

கணிப்பு
இதையடுத்து, நேரடியாக இறுதி விசாரணை நடத்துவது குறித்து இரு தரப்பிடமும் ஆலோசிக்கப்பட்டது. நேரடி இறுதி விசாரணைக்கு ஓபிஎஸ் - எடப்பாடி இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட நிலையில், இரு தரப்புகளும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... நேற்றைய வாதத்தை பொறுத்தவரை, நேரடி விசாரணைக்கு தயார் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவித்துள்ளதே, எடப்பாடி தரப்புக்கு லேசான அதிர்ச்சியை தந்துள்ளதாம்.. கிட்டத்தட்ட நேரடி சவாலுக்கு ஓபிஎஸ் தயாராகிவிட்டார் என்றே கணிக்கப்படுகிறது.. நேரடி விசாரணைக்கு வருவதாக சொல்லிவிட்ட நிலையில், எடப்பாடி தரப்பில் யார் வருவார்கள்? எடப்பாடியே வரவாய்ப்புள்ளதா? அதற்கான முகாந்திரம் இருக்கிறதா? என்றெல்லாம் தெரியவில்லை..!

இழுத்தடிப்பு
அதேபோல, தனக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளதும், எடப்பாடி டீமுக்கு கலக்கத்தை தந்துள்ளதாம்.. ஓபிஎஸ்ஸுக்கென்று எந்த ஆதரவும் இல்லை என்று கோர்ட்டில் வாதங்களை முன்வைத்துவரும் நிலையில், எந்த அடிப்படையில் ஓபிஎஸ் இவ்வாறு சொல்கிறார்? யார் அந்த மாவட்ட செயலாளர்கள்? ஒருவேளை, காலதாமதம் செய்வதற்காகவும், வழக்கை இழுத்தடிப்பதற்காகவும் இப்படி ஓபிஎஸ் தரப்பு சொல்கிறதா? என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி கூடாரம் கலங்கி போயுள்ளதாம்.. அதேசமயம், நேற்றைய தினம் நடந்த இந்த வாதங்களை எல்லாம் கண்டு ஓபிஎஸ் தரப்பு மிகுந்த நம்பிக்கையிலும், மகிழ்ச்சியிலும் உள்ளதாம்.. இந்த முறை எப்படியாவது தங்களுக்கு சாதகமான உத்தரவு வரும் என்றும் உறுதியாக நம்புகிறதாம்..!!

A பார்ம், B பார்ம்
அதுமட்டுமல்ல, தேர்தல் ஆணையம் மட்டுமே இந்த விஷயத்தில் தலையிட முடியும் என்பதால், இந்த விஷயத்தில் ஆணையம் என்ன செய்ய போகிறது என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.. பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இருந்தாலும், A பார்ம், Bபார்ம்மில் கையெழுத்துபோட்டு, இரட்டைஇலையை வழங்கினால்தான், பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை பெற முடியும். எனவே, அது தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டிய முடிவு.. அப்படியிருக்கும்போது, ஓபிஎஸ் இனிமேல், அங்குதான் போராட வேண்டுமே தவிர, நீதிமன்றத்தில் போராடி பலனில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

க்ளைமேக்ஸ்
எப்படி பார்த்தாலும், 90 சதவீதம் கட்சியை தன் கையில் கொண்டுவந்துவிட்டதாக எடப்பாடி தரப்பு சொல்லிவரும்நிலையில், சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல், கட்சியில் உறுப்பினராகவும் இல்லாமல், நிர்வாகிகளும் போதுமான அளவு இல்லாமல், ஓபிஎஸ் சட்டரீதியான விஷயங்கள் அனைத்தையும் எப்படி சமாளிக்க போகிறார் என்பது மிகப்பெரிய சவாலாக எழுந்துள்ளது.. ஆகமொத்தம், எடப்பாடி பழனிசாமியோ அல்லது ஓபிஎஸ்ஸோ, இதில் யாராக இருந்தாலும், அவர்களை அங்கீகரிக்க போவதும், தலைவர்களாக அவர்களை தீர்மானிக்க போவதும், மக்கள் மன்றம்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications