வீக் எண்ட் கிடையாது.. வீட்டுக்குள்ளேயே இருங்க..! புரட்டி எடுக்கப் போகும் மழை.. மெட் கொடுத்த வார்னிங்
சென்னை: தமிழகத்தில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தின் கோடை வெயில் மற்றும் கோடை மழைக்குப் பிறகு சில நாட்கள் மழை பெய்வதும், சில நாட்கள் கடும் வெயிலுமாக வானிலை நிலவுகிறது. ஆடி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில், பல பகுதிகளில் தற்போதே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தற்போதும் காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மண் சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் பெய்துவரும் கனமழை காரணமாக எமரால்டு,பவானி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "நேற்று முன் தினம் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (19.07.2024) காலை 0530 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 08.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப் பெற்று வமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (20.07.2024) ஒரிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்கும்.
இதன் மூலம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 ° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கேரள - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications