தமிழகத்தில் நீடிக்கும் மழை.. 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! எங்கெங்கு தெரியுமா?
சென்னை : கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில், இன்று ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஸ்ரீமதுரை, புறமணவயல், தொரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீமதுரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். ஆற்றைத் தூர்வார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையில் 2-வது நாளாக மழை
மதுரையில் நேற்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தெற்குவாசல், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், கே.கே. நகர், அண்ணாநகர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கியது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்வெட்டு ஏற்பட்டது. இதேபோல், திருமங்கலம், நாகைமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

திண்டுக்கல்லில் பரவலாக மழை
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. கனமழை காரணமாக பழனி அருகேயுள்ள வரதமாநதி அணை முழு கொள்ளவான 66 அடியை எட்டியது. மயிலாடும்பாறை அருகே பெய்த கனமழையால் வையாபுரி குளத்திற்குச் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். கொடைக்கானலில் மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மலை பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவியது.

மின்னல் தாக்கி பெண் பலி
ராணிபேட்டை மாவட்டம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் வெளியூர் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சித்தாத்தூர் பகுதியில் அருகே அவர்கள் வந்தபோது, மழை பெய்ததால், அப்பகுதியில் இருந்த மரத்தடியில் இருவரும் ஒதுங்கினர். அப்போது மின்னல் தாக்கியதால் பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திகேயன் மீட்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video

8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில், இன்று ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications