எடுத்து வைக்கும் 1 செமீ அடியும்.. ரொம்ப முக்கியம்! நகர்ந்து செல்லும் பிரக்யான் ரோவர்.. விலகாத மர்மம்
சென்னை: சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதன்பின் பிரக்யான் ரோவர் நிலவில் நகர தொடங்கி உள்ளது. இது தொடர்பான சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சந்திரனை இந்தியா அகப்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சந்திரயான் 2 திட்டம் பாதி தோல்வி அடைந்த நிலையில் சுணங்கி போய் இருந்த இஸ்ரோ கடுமையான உழைப்பிற்கு பின் சந்திரயான் 3 திட்டத்தை முழு வெற்றியாக்கி சாதனை படைத்து உள்ளது.

நிலவிற்கு விக்ரம் லேண்டர், பிரக்யான் லேண்டர் இரண்டையும் வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. அதோடு நிற்காமல் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் மனித பொருள் , லேண்டர், ரோவர் என்ற சாதனையையும் இந்தியா தன் வசமாக்கி உள்ளது.
ரோவர் எப்படி நகர்ந்தது?: விக்ரம் லேண்டர் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருந்தது. பிரக்யான் ரோவர் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வந்தது. அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்ல தொடங்கி உள்ளது. இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்யும்.
இதில் சூரிய வெளிச்சத்தை, குளிரை தாங்க தங்க நிறத்தில் கவர் செய்யப்பட்ட பகுதி இருக்கும். இது 14 நாட்கள் இயங்கும். சோலாரில் இயங்க கூடியது. இன்று வெற்றிகரமாக இது களமிறக்கப்பட்டது.
அந்த நொடி என்ன நடந்தது?: சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலம் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கு "கோ அஹெட்" சிக்னல் அனுப்பப்பட்டது. இது விக்ரம் லேண்டர் இறங்கி சரியாக 4 மணி நேரம் கழித்து புழுதி எல்லாம் அடங்கிய பின் அனுப்பப்பட்டது. விக்ரம் லேண்டாரால் ஏற்பட்ட புழுதி ரோவரின் மீது படியாமல் இருக்க இந்த கால நேரம், எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ரோவருக்கு ஆர்பிட்டர் கொடுத்த சிக்னலை லேண்டர் பகிர்ந்து கொண்டது.
விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடைந்தது, பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கியது. பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வந்தது.
ஒரு செமீ: ஒவ்வொரு செமீ என்ற விகிதத்தில் மிக மெதுவாகவே பிரக்யான் ரோவர் நகர்ந்து செல்லும். இது எடுத்து வைக்கும் ஒவ்வொரு செமீட்டரும் மிக முக்கியம். ஒரு நொடிக்கு ஒரு செமீ என்ற விகிதத்தில் இது நகர்ந்து செல்லும். இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலாஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
இந்த ரோவர் அனுப்பும் போட்டோக்கள், தகவல்கள் எல்லாம் விக்ரம் லேண்டருக்கே செல்லும். அங்கிருந்து ஆர்பிட்டருக்கு செல்லும். அந்த ஆர்பிட்டர் மூலம் ரியல் டைமில் உடனுக்குடன் இஸ்ரோ கண்ட்ரோல் அறைக்கு எல்லா தகவல்களும் வரும். 14 நாட்கள் பூமி நேரப்படி இதில் நிலவில் ஆய்வு செய்யும்.

சோலார் தினம்: அதாவது ஒரு சோலார் தினம். அதாவது நிலவில் சூரியன் படும் ஒரு நாள். அது பூமி நேரப்படி 14 நாட்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த 14 நாட்கள் சோலார் பவர் மூலம் இந்த ரோவர், லேண்டர் இயங்கும். அதன்பின் அதன் செயல்பாடு நின்று விடும். அதன்பின் மிக கடுமையான குளிர் இருப்பதால் இது தொடர்ந்து இயங்காது.
ஆனால் அதே சமயம் 14 நாட்களுக்கு பின் சூரிய ஒளி மூலம் இது மீண்டும் ரீ சார்ஜ் ஆகுமா என்பது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கே தெரியவில்லை. 14 நாட்கள் முடிந்த பின் மீண்டும் இருளான 14 நாட்கள் கடந்து.. மொத்தம் 28 நாட்கள் முடிந்த பின்தான் பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குமா என்று தெரிய வரும்.












Click it and Unblock the Notifications