ஆவடியில் அதிகாலையிலேயே இளம் பெண்ணுக்கு உடல் முழுக்க அரிப்பு.. எமனாக மாறிய பூச்சி.. கவனம் மக்களே
சென்னை: சென்னை ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் என்பவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் சர்மிளா அயப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி காலை சர்மிளா படுக்கையில் இருந்து எழுந்தபோது திடீரென அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் சில நிமிடங்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.
விஷபூச்சிகள் கடித்தால் கண்டு கொள்ளாமல் விடக்கூடாது. உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டும். சிலர் வண்டு கடித்தால் கவனிக்காமல் விடுகிறார்கள். இதேபோல் சிலர் பூரான், தேள் கடித்தாலும் உடனே மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் கவனக்குறைவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. அப்படித்தான் ஆவடியில் சம்பவம் நடந்துள்ளது.

உணவு டெலிவரி ஊழியர் மகள்
சென்னை ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், பாரதி நகரை சேர்ந்த 47 வயதாகும் சங்கர் என்பவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தார்கள். இவரது மூத்த மகள் சர்மிளாவுக்கு 19 வயது ஆகிறது. சர்மிளா அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
உடலில் அரிப்பு
கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி காலை சர்மிளா படுக்கையில் இருந்து எழுந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதால் அவர் சொரிந்து கொண்டே இருந்திருக்கிறார். சில நிமிடங்களில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் எல்லாம் பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டது. உடனே வீட்டிலிருந்த மஞ்சளை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு குளிப்பதற்காக சர்மிளா சென்றிருக்கிறார்.
வாயில் நுரை
அப்போது அவர் திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி கீழே விழுந்துள்ளார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை சங்கர், சர்மிளாவை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்க கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சர்மிளா உடல் நிலை
இருப்பினும் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் பெற்றோர் சர்மிளாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சர்மிளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முல்லைவேந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
என்ன காரணம்
முதல்கட்ட விசாரணையில் ஏற்கனவே சர்மிளாவின் தந்தை சங்கருக்கு இதை போன்று விஷ பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டு உடலில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதைபோல சர்மிளாவிவையும் விஷ பூச்சி ஏதாவது கடித்து உயிரிழந்திருக்கலாம் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. எனினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சர்மிளாவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications