அண்ணா பல்கலையில் அத்துமீறல்.. அக்யூஸ்ட் ஞானசேகரன் கடத்தல் பார்ட்டியாமே! வெளியான பகீர் புகைப்படங்கள்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஏற்கனவே பல மாணவிகளிடம் அத்துமீறியதாகவும், மூன்று மனைவிகளுடன் வசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஏற்கனவே ஞானசேகரன் பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கியுடன் ஆட்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் எனவும், பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவர் எப்படி சுதந்திரமாக நடமாடினார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். இந்த கல்லூரியில் பொறியியல் சார்ந்த பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்விகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தான் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அண்ணா பல்கலை சம்பவம்:
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியும் அந்த மாணவரும் தனியாக பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் இருவர் குறித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சொல்லி விடுவேன் என்றும், சார் ஒருவர் பேசுகிறார் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை:
மேலும் அந்த இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்தனர். ஞானசேகரன் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவர் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஞானசேகரனின் பகீர் பின்னணி:
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல மாணவிகளிடம் ஞானசேகரன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. சென்னையில் பிரியாணி கடை நடத்தி வரும் அவர் வியாபாரம் முடிந்ததும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறித்ததோடு அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே திருட்டு வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது இருப்பதாக கூறப்படுகிறது.
கடத்தல் புள்ளி:
அது மட்டும் இல்லாமல் மூன்று பெண்களுடன் அவர் வசித்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் ஞானசேகரன் குறித்து அடுத்தடுத்து பல அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆள்கடத்தல் வழக்கு ஒன்றில் ஞானசேகரன் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகி வந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து டைல்ஸ் கடை உரிமையாளரை மிரட்டி கடத்தி அவர்களது குடும்பத்தினரிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டிருக்கிறார். அவரது குடும்பத்தினர் 12 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த நிலையில் மேலும் 13 லட்சம் கொடுத்தால் தான் அவரை விடுவோம் இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என கூறியுள்ளார்.
போலீசாரால் கைது:
இதை அடுத்து போலீசார் உறவினர்கள் போல பேசி ஞானசேகரன் கூட்டாளிகளை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திண்டிவனம் போலீசாருடன் சேர்ந்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் சுதந்திரமாக நடமாடியது எப்படி, பாதுகாப்பு நிறைந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவரை அனுமதித்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications