சென்னையின் அசோகா ஹோட்டலை அலறவிட்ட "ஹெல்மெட்".. அது நான் இல்லீங்க, சாகப்போறேன்.. பதறிவந்த எஸ்.ஐ.
சென்னை: சென்னை அசோகா ஓட்டலில், ஹெல்மெட்டை திருடியது நிஜமாகவே யார் என்று தெரியவில்லை. எனவே, உண்மை குற்றவாளியை போலீசார் விரைவில் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்று வலுத்து வருகிறது.
சென்னையை சேர்ந்தவர் சத்திய நாராயணன். இவர் கடந்த 5ம் தேதி, இரவு 7 மணிக்கு ஸ்கூட்டரில் எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலுக்கு வந்தார்.. தன்னுடைய ஹெல்மெட்டை ஸ்கூட்டர் கண்ணாடியில் வைத்துவிட்டு, ஓட்டலுக்குள் சென்றிருக்கிறார்..

ஒருமணி நேரம் கழித்து, 8 மணிக்கு வெளியே வந்த சத்தியன், ஸ்கூட்டரை எடுக்க போனார்.. அப்போதுதான், ஹெல்மெட் மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. எனவே, உடனடியாக ஓட்டல் மேனேஜரிடம் புகார் தந்துள்ளார்.. உடனே மேனேஜரும், ஓட்டல் பார்க்கிங்கில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார்..
ஹெல்மெட்: அப்போது, காக்கி யூனிபார்முடன் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து நிற்பதும், சிறிது நேரம் அங்கேயே நோட்டமிட்டுவிட்டு, பிறகு சத்தியனின் ஹெல்மெட்டை எடுத்து தன்னுடைய தலையில் மாட்டிக்கொண்டு கிளம்பிசென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சத்திய நாராயண்ன் அந்த சிசிடிவி காட்சிகளை வாங்கி, தன்னுடைய எக்ஸ் வலைப்பக்கத்தில் போஸ்ட் செய்தார். அத்துடன், சென்னை மாநகர காவல்துறைக்கும் புகார் தந்தார்..
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை நடத்தியபோதுதான், எழும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் விஜயன் என்பவர், ஹெல்மெட்டை திருடியிருப்பது தெரியவந்தது. போலீஸ்காரரே இப்படி ஹெல்மெட்டை திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல்: இந்த நிலையில், போலீஸ்காரர் எஸ்ஐ விஜயன் வாட்ஸ் அப்பில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.. அதில், "நான் எழும்பூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கிறேன. என் பெயர் விஜயன். அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று, அசோகா ஓட்டலில் நான் ஹெல்மெட் திருடியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அது நான் இல்லை. சரியாக விசாரிக்காமல் தவறான தகவலை அளித்து என் காவல் பணிக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளனர்.
என் மகன் திருமணத்திற்கு, அதிகாரியிடம் அனுமதிபெற்று, நான் 30 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளேன். ஊரிலேயே இல்லாத நான் எப்படி திருட்டில் ஈடுபட்ட முடியும்? இதெல்லாம் அவமானமாக இருக்கிறது.. ஹெல்மெட் திருடிய நபர் யார் என தெரிந்தால் குரூப்பில் பதிவிடுங்கள்.. 26 ஆண்டுகால பணியில் எந்தவிதமான தப்பும் நான் செய்ததில்லை. இப்போது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையில் உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.
கோரிக்கை: இந்த தகவல் மேலும் குழப்பத்தை தந்துள்ளது.. உண்மையிலேயே ஹெல்மெட்டை திருடியது, விஜயன்தானா? அல்லது வேறு யாராவதா? விசாரணையில் குளறுபடி நடந்ததா? என்று உயர்அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சக காவலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications