கிளாம்பாக்கத்தை விட்டுடுங்க.. சென்னை பஸ்ஸிலேயே முளைத்த மேட்டர்.. யாருமே கண்காணிப்பதில்லையா? என்னாச்சு
சென்னை: மாற்றுத்திறனாளிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அதிரடிகளை தமிழக போக்குவரத்து துறை செய்து வரும்நிலையில், இன்னொரு முக்கிய கோரிக்கை அரசுக்கு சென்றுள்ளது.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியாகி, அந்த பணியும் துவங்க போகிறது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு, தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஒரு முக்கிய கோரிக்கையை அரசுக்கு விடுத்திருந்தனர்.
மாற்று திறனாளிகள்: அந்த அறிக்கையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க அரசு முயற்சிகள் எடுத்துள்ளதை அறிகிறோம். எனினும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்கப்படவில்லை என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறிப்பாக, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொட்டுணர்ந்து செல்லும் தரை அனைத்து இடங்களுக்கும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும், செவி மற்றும் பேசும் திறன் பாதித்த மாற்றுத் திறனாளிகள் அறியும் வகையில் காட்சி அறிவிப்பு எல்லா இடங்களிலும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதவிர, கடுமையாக பாதித்த மாற்றுத் திறனாளிகள் இயன்ற அளவில் பேருந்துகளின் அருகாமையில் சென்று வாகனங்களை நிறுத்த தனி வசதி இல்லை என்றும் தெரிகிறது.
உரிய வசதிகள்: அதனால், அனைத்து துறை அதிகாரிகளை கொண்டு விரைவில் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சட்ட விதிகளின்படி உரிய வசதிகளை இப்புதிய பேருந்து நிலையத்தில் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கண்காணிப்பு: இந்நிலையில், மாநகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.. அதாவது, சென்னை, மாநகர போக்குவரத்துக்கழகத்தின் கீழ் மட்டுமே, 629 வழித்தடங்களில் 3,233 மொத்தம் பஸ்கள் இயக்கப்படுகின்றன... இவைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறைய மற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் நலன் கருதி ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, எமர்ஜென்சி பட்டன், ஊன்றுகோல் வைப்பதற்கான வளையம் போன்றவை ஸ்பெஷலாக அமைக்கப்பட்டுள்ளன... ஆனால் இவையெல்லாம் முறையாக நடைமுறையில் உள்ளதா? என்று யாருமே கண்காணிப்பதில்லையாம்..
மாநகர பேருந்துகள்: ஒருசில மாநகர பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல் வைப்பதற்காக இடவசதி உள்ளது என்றாலும், இது படிக்கட்டை ஒட்டி அமைந்திருக்கிறதாம். தடுப்பு எதுவுமே இல்லாததால், பஸ் வேகமாக சென்றாலும், ஊன்றுகோல் தவறி விழுந்துவிடும்.. அல்லது படியில் ஏறுவோருக்கு இடையூறு ஏற்பட்டுவிடும்.
அதனால், பயணிகள் கால் வைக்கும் இடத்தில் ஏதேனும் தடுப்புகள் இருந்தால், ஊன்றுகோலால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்ற கோரிக்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதில், 500 மின்சார பஸ்கள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில், மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்..
நடவடிக்கை: இதற்கான நடவடிக்கையிலும் தமிழக அரசு மும்முரமாகி உள்ள நிலையில், தற்போதுள்ள மாநகர பேருந்துகள் முதல், வரப்போகும் 420 புதிய பேருந்துகள் வரை, மாற்று திறனாளிகளுக்கான முழு வசதிகளும் அவைகளில் செய்து தரப்படும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications