மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை: சென்னை வாழ் மக்கள் தங்கள் சொத்து வரியை மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் வழியாகவே சொத்துவரியை செலுத்திவிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை வாழ் மக்கள் தங்கள் சொத்து வரியை மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியைச் செலுத்துவதன் மூலம், தாமதக் கட்டணம் அல்லது அபராதம் (Penalty) விதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி என்பது தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துகள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான இடத்திற்கு அரசு வரியை விதிக்கும். தமிழ்நாடு அரசில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் போன்றவற்றிற்கு செய்யப்படும் வரி விதிப்பு சொத்து வரி எனப்படுகிறது.
அதன்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்துவரிக் கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வந்தது. கட்டிடம் பயன்படுத்தப்படும் தன்மைக்கேற்ப ஒரு சதுர அடிக்குரிய குறைந்த மற்றும் அதிகபட்ச அடிப்படை வரியை தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது.
சொந்தமாக வீடு, கட்டிடம், வணிக நிறுவனம் போன்றவற்றை வைத்துள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சொத்துவரி செலுத்த வேண்டியது கட்டாயம். அப்படி சொத்து வரிகட்ட தவறும் பட்சத்தில் சொத்து வரியுடன் சேர்த்து தனி வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்.
சென்னை மக்கள் சொத்து வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல தேவையில்லை. வாட்ஸ்அப் வழியாகவே தங்களின் சொத்துவரியை செலுத்திவிட முடியும். முதலில் 9445061913 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்கவும். அந்த எண்ணை சேமித்ததும் வரும் விருப்பங்களில் "Most Used Services" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அதில் "Property Tax" என்ற பிரிவைத் தேர்வு செய்து, உங்கள் விவரங்களை உள்ளிட்டு வரியைச் சுலபமாகச் செலுத்திவிடலாம்.
வாட்ஸ்அப் வசதி தவிர, இணைய வசதி இல்லாதவர்கள் அல்லது நேரடியாகச் செலுத்த விரும்புவோருக்காகப் பிற வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அருகாமையில் உள்ள மாநகராட்சி அலுவலகங்கள் (Zonal Offices) மூலம் வரி செலுத்தலாம்.
அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் (e-Seva Centres) வாயிலாகவும் சொத்து வரியைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னை மக்கள் இதுவரை சொத்து வரி செலுத்தவில்லை என்றால் உடனடியாக இந்த வழிமுறைகளை பின்பற்றி வரியை செலுத்தவும்.












Click it and Unblock the Notifications