சென்னை மாநகராட்சி சொத்து வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, தொழில்வரியை ரம்ஜான் விடுமுறை தினத்திலும் செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் ஆகிய அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் கடைசி இரண்டு நாட்கள் வங்கிகளில் பணம் செலுத்த முடியாத நிலை இருக்கிறது. இதையொட்டியே சென்னை மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சி என சென்னை மாநகராட்சியில் 14 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் சொத்து வரி உட்பட பல்வேறு வரிகளை செலுத்துவார்கள். குறிப்பாக இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் வரி செலுத்த ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும். அந்த வகையில், இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுவன வரி ஆகியவற்றை மாநகராட்சியின் வருவாய்த்துறையில் செலுத்தி வருகின்றனர்.

தொழில் உரிமங்களையும் புதுப்பித்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பு நிதியாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுவன வரி ஆகியவற்றை பொதுமக்கள் செலுத்துவதற்காகவும், தொழில் உரிமங்களை புதுப்பித்து கொள்ளவும் வழிவகை செய்யும் வகையிலும் மாநகராட்சியின் வருவாய்த்துறை வரும் மார்ச் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31-ம் தேதி (ரம்ஜான்) ஆகிய விடுமுறை நாட்களிலும் இயங்கும்" என்று அறிவித்துள்ளது.
வங்கிகளில் மார்ச் 29ஆம் தேதி முடிந்த பின்பு தொடர்ந்து விடுமுறை வருவதால், வரி செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களை தடுக்க இந்த ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications