அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்.. சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி, இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து பணம் பெற்றதாகவும் அப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் காலை 7 மணி முதல் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர்.கரூர் மற்றும் சென்னையில், செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகம் ஆகியவற்றில் மத்திய துணை ராணுவப்படை துணையுடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

விசாரணையின் முடிவில் ஜூன் 14 நள்ளிரவில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.
இதனிடையே சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்க பிரிவினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர் படுத்தப்பட்டார்.அப்போது அவரிடம் அமலாக்க பிரிவினர் தாக்கல் செய்த மனு கிடைத்ததா என நீதிபதி கேள்வி எழுப்பினார் அதற்கு செந்தில் பாலாஜி இல்லை என தெரிவித்ததை அடுத்து மனுவை கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளும்படி நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வாதிட்ட அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், அமலாக்க பிரிவினர் விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜி காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் போக்குவரத்துக் கழக நியமனங்களுக்கு பெற்ற தொகை குறித்த முழு விவரங்களை பெற வேண்டி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த வாதத்துக்கு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 13 ஆம் தேதி காலை 7 மணி முதல் 14ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்றும் இளங்கோ வாதிட்டார். மேலும், இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்க பிரிவின் துணை இயக்குனர் கார்த்திக் தாசரி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் கைது வரைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தனது வாக்குமூலத்தை அளித்தார்.
இறுதியாக அமலாக்கப் பிரிவினர் 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு குறித்து செந்தில் பாலாஜியின் விருப்பம் குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விருப்பமில்லை என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, உயர் நீதிமன்ற உத்தரவை படித்த பிறகு இந்த வழக்கின் மீதான உத்தரவை ஜூன் 16ஆம் தேதியான இன்றைய தினம் பிறப்பிப்பதாக கூறி, தீர்ப்பை தள்ளிவைத்தார்.
இந்நிலையில் தான் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து 15 நாள் கஸ்டடி கேட்டு அமலாக்கத்துறை வாதம் வைத்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ‛‛3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அமலாக்கத்துறைக்கு கஸ்டடி வழங்கினால் உடல்நலம் பாதிக்கப்படும். இதனால் அமலாக்கத்துறை கஸ்டடிக்கு வழங்க கூடாது'' என கூறப்பட்டது.
இது தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜியை வரும் 23ம் தேதி வரை 8 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடிக்கு வழங்கி உத்தரவிட்டது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் எனக்கூறி நீதிபதி அல்லி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதன்மூலம் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை வரும் 23ம் தேதி வரை விசாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications