பிறந்த நாளில் குழந்தையை கொஞ்ச அனுமதி மறுத்த மனைவி.. சென்னையில் எஸ்ஐ எடுத்த விபரீத முடிவு
சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுத்துறை சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜான் ஆல்பர்ட் போலீஸ் சீருடையுடன் உயிரையே விட்டுள்ளார். ஐந்து பக்கத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பொன்னப்ப நகரை சேர்ந்த 33 வயதாகும் ஜான் ஆல்பர்ட், 2016-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். ஜான் ஆல்பர்ட் கடந்த 2 ஆண்டுகளாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுத்துறை சப்- இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜான்சி ஜெஸி (30). இவர்களுக்கு 3 வயதில் இரட்டை மகள்கள் இருக்கிறார்கள். சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பின் 3-வது மாடியில் ஜான் ஆல்பர்ட் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

திங்கள்கிழமை அன்று மதியம் ஜான் ஆல்பர்ட் வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். ஆனால் நீண்டநேரமாக அறையை விட்டு வெளியே வரவில்லை. கதவை தடடி பார்த்த ஜான்சி கதவு நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்தார். இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கு தனது கணவர் ஜான் ஆல்பர்ட் போலீஸ் சீருடையுடன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே அருகில் இருந்தவர்கள் ஜான் ஆல்பர்ட்டை கயிற்றில் இருந்து இறக்கி தனியார் மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜான் ஆல்பர்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பட்டினப்பாக்கம் போலீசார், ஜான்ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினாரக்ள். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் தற்கொலைக்கு முன்னதாக ஜான் ஆல்பர்ட் எழுதிய 5 பக்க உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது
அதில் ஜான்ஆல்பர்ட் கூறுகையில், " நான் ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏராளமான பணத்தை இழந்துவிட்டேன். கடன் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் எனக்கும், எனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எனது மனைவி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதிகாரிகள் எங்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்.
அண்மையில் எனது குழந்தைகளுக்கு பிறந்தநாள் வந்தது. நான் அவர்களுக்கு பாசத்தோடு முத்தம் கொடுக்க வந்தபோது என்னை முத்தம் கொடுக்கவிடாமல் மனைவி தடுத்துவிட்டார். அது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால் இந்த துயர முடிவை நான் எடுத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப பிரச்சினையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications