சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி.. சீறிப்பாயும் கார்கள்!
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த FIA அனுமதிச் சான்று வழங்கிய நிலையில், கார் பந்தயத்துக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டு, தற்போது ரேஸ் தொடங்கியுள்ளது. ஃபார்முலா 4 கார் ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் இன்றும் நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயம் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரம் அளவுக்கு 19 திருப்பங்களை கொண்ட இரவு நேர சர்கியூட் ரேஸிங் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அதேசமயம் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்துவதற்கு FIA எனும் தரச்சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். இந்த சான்றிதழை இன்று மதியம் 12 மணிக்குள் வாங்கி சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இன்று பிற்பகல் 2.30 அளவில் இருந்து போட்டிகள் ஆரம்பமாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. FIA (Formula Regional Championship) சான்று என்பது ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த, கார் பந்தய சாலைகு தகுதி சான்றிதழை சர்வதேச கார் பந்தய கூட்டமைப்பிலிருந்து பெற வேண்டும். சென்னையில் திடீரென பெய்த மழை காரணமாக தகுதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் FIA சான்றிதழ் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன் விசாரணை நடைபெற்ற போது, அரசு தரப்பிலிருந்து வாதிடுகையில், ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA சான்று பெற இன்று இரவு 9 வரை கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால் நீதிபதிகள், இன்று இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்து அதற்குள் FIA சான்று வாங்கி சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஒருவேளை 8 மணிக்குள் FIA தரச் சான்று பெற தாமதமானதால் போட்டிகள் இன்று நடத்தப்படக்கூடாது என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, FIA சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டது. இந்த போட்டி நடத்த மொத்தம் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் பாதுகாப்பாக கார் பந்தயம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கார் பந்தயம் நடத்துவதற்கு FIA அனுமதிச் சான்று வழங்கியுள்ளது. இறுதிக்கட்ட பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு 2027 வரை கார் ரேஸ் நடத்த தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டது.
இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய நாள் போட்டிகள் இன்று இரவு 11 மணியளவில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை உற்சாகப்படுத்த கார் ஸ்டண்ட் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, 7 மணியளவில், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. ஃபார்முலா 4 கார் ரேஸை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தற்போது கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications