கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி ரோட்டில் யார் பாருங்க.. கரண்ட் வேற போயிருச்சு.. மிட்நைட்டில் கொந்தளித்த சென்னை
சென்னை: சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன.
கோடை வெயில் முடிந்தபிறகும்கூட, வெப்பநிலை அதிகரித்தவாறே உள்ளது.. அதேபோல, பல்வேறு சமீப நாட்களாக மழையும் பெய்து வருகிறது. இதில் மழையாக இருந்தாலும்சரி, வெயிலாக இருந்தாலும் சரி, மின்வெட்டுகள் தொடர்கதையாகி விடுகிறது. 4 நாட்களுக்கு முன்புகூட, தரமணி, வேளச்சேரி, மடிப்பாக்கம், தொரைப்பாக்கம் போன்ற தென் பகுதிகளிலிருந்து அதிகமாக புகார்கள் கிளம்பின.

மின்வாரியம்: ஆவடி மண்டலம், மொகப்பையர், தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நேரம் மின்வெட்டு நிலவுவதாகவும், நகருக்குள், மண்டவெளிப்பாக்கம் பகுதிவாசிகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வரை மின்சாரம் இல்லை என்றும் வேதனையுடன் கூறினார்கள் அப்பகுதி மக்கள்.
"சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கரண்ட் இல்லாமல் அவதியடைகிறோம்.. வேலைக்கு சென்று வீடு திரும்பினால், நிம்மதியாக ஓய்வெடுக்க கூட முடியாத சூழல் ஏற்படுகிறது.. கொசுக்கடியால் யாராலும் வீட்டில் தூங்க முடிவதில்லை.. நோயாளிகளும் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர்..
இப்படி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் கடும் அவதிக்கு ஆளாவதாக அவதியடைகிறோம். இன்றும் மின்வெட்டு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.. என்று ஆவேசத்துடன் கூறியிருந்தார்கள்.
கூடுவாஞ்சேரி: இந்நிலையில், மின்வெட்டை கண்டித்து அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் மக்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.. கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரம் பகலும், இரவும் என மாறி மாறி கரண்ட் போய்விடுவதால், கொந்தளிப்புக்குள்ளானார்கள் அந்த பகுதி மக்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, நந்திவரம், கன்னிவாக்கம், சாந்தாதேவி நகர், தர்காஸ், பெருமாட்டுநல்லூர் போன்ற இடங்களில் 10:30 மணிக்கு கரண்ட் போய்விட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், நள்ளிரவில் 12:30 மணிக்கு கூடுவாஞ்சேரி மின் வாரியம் முன்பு ஜிஎஸ்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரியம்: மின் வாரியத்தின் மீது விரக்தியடைந்தவர்கள் ஜிஎஸ்டி சாலையிலேயே அமர்ந்து முழக்கமிட்டனர்.. இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால், நள்ளிரவிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. பிறகு கூடுவாஞ்சேரி மின் வாரிய அலுவலகம் உள்ளே வரவழைத்து, மின் வாரியத்தினருடன் சேர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. இதற்கு பிறகு விடிகாலை 4.00 மணிக்கு மின்சாரம் வந்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
நிரந்தர தீர்வு: ஆனால், லோ-வோல்டேஜ் காரணமாக வீட்டிலிருந்த எந்த மின் சாதனங்களையும் பயன்படுத்த முடியவில்லையாம். ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் கரண்ட் போவதாகவும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொத்தேரி மறைமலை நகரிலிருந்து வரும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், காட்டாங்கொளத்தூரில் ஏரியில் மின்கம்பி துண்டானதாலும், நேற்றைய தினம் மின் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இரவு என்பதால் சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளனர்.
இனி நிம்மதி: அதுமட்டுமல்ல, புதிய கட்டமைப்பு பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவடைய உள்ளதால், காரசங்கால், நெல்லிக்குப்பம், ஊனைமாஞ்சேரி போன்ற இடங்களில் லோ வோல்டேஜ் பிரச்சனை இனி வர வாய்ப்பில்லை" என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications