ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு! சிங்கமுத்துவுக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: ரூ 5 கோடி மான நஷ்ட ஈடு கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் இது தொடர்பாக சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை சிங்கமுத்து தரக்குறைவாக பேசி பேட்டி கொடுத்ததாக வடிவேல் புகார் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர், வைகை புயல் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் இதுவரை 300 படங்களுக்கும் மேல் நடித்து நகைச்சுவை நடிகராக வலம் வருகிறேன். என்னுடன் நடித்த சக நடிகரான சிங்கமுத்துவும் நானும் கடந்த 2000 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக நடித்து வந்தோம்.

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு என்னை பற்றி மோசமாக விமர்சித்து வந்ததால் அவருடன் சேர்ந்து நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன். இந்த நிலையில் தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை சிங்கமுத்து எனக்கு வாங்கித் தந்தார். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் தனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்துவது போன்றதாகும். எனவே சிங்கமுத்து ரூ 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்.
அத்துடன் என்னை பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபத ஆர்.எம்.டி. டீக்காராமன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வடிவேலு தரப்பில் வழக்கறிஞர்கள் கே.ஜி ரகுநாதன், என் செந்தில் குமார் ஆகியோர் வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி கூறுகையில் இந்த மனு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
வடிவேலு ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இவர் 1990களில் இருந்து கொடி கட்டி பறந்துவந்தார். பல மீம் கிரியேட்டருக்கு தனது முக பாவனைகள் மூலம் வடிவேலு உதவி வருகிறார். 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மேடையில் ஏறிய வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமை விமர்சித்து பேசினார். அப்போது அதிமுக- தேமுதிக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சத்தில் வடிவேலுவுக்கு யாருமே வாய்ப்பு கொடுக்காமல் இருந்தனர்.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. அதில் அவருடைய காமெடியும் நன்றாக இல்லை என்றார்கள். இதைத் தொடர்ந்து மாமன்னன் என்ற படத்தில் குணச்சித்திர நடிகராக வடிவேல் நடித்திருந்தார். அந்த படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துவிட்டது. வடிவேல் தன்னுடன் நடித்த போண்டா மணி, பாவ லட்சுமணன், அல்வா வாசு உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்த போது கூட வடிவேலு ஒரு பைசா கூட கொடுத்து உதவவில்லை என்பதுதான் பலரது வேதனையாக இருந்தது.












Click it and Unblock the Notifications