இரு எஸ்.ஐ.க்களுக்குள் கள்ளக்காதல்! பெண்ணுக்கு மட்டும் தண்டனை விதிப்பா? ஏற்க மறுத்த ஹைகோர்ட்
சென்னை: திருமண பந்தத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரு உதவி ஆய்வாளர்களில், பெண் உதவி ஆய்வாளருக்கு மட்டும் தண்டனை விதித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமண பந்தத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டதன் மூலம், காவல் துறைக்கு தவறான பெயரை ஈட்டித் தந்ததாக, பெண் உதவி ஆய்வாளர் மற்றும் ஆண் ஆய்வாளருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் இருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரு வேறு அதிகாரிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
ஆண் உதவி ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என அவரது வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தார். ஆனால் பெண் உதவி ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர் மீதான புகார் குறித்து விசாரித்த விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பெண் உதவி ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைத்து தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பெண் உதவி ஆய்வாளர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, துறை ரீதியிலான விசாரணையில் சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாகக் கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு வழங்கும்படி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒரே குற்றச்சாட்டு கூறப்பட்டால், ஒரே விசாரணை அதிகாரியை கொண்டே விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கில் இரு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை இரு வேறு அதிகாரிகள் நடத்தியதால், இரு வேறு முடிவுகள் வந்துள்ளன. விதிகளை பின்பற்றாமல் இந்த விசாரணை நடந்துள்ளது. இதை அனுமதிக்க முடியாது என கூறி, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, காவல் துறை மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications