கல்லூரி மாணவன் வழக்கு! மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் வாரியத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மின் இணைப்புக் கோரி கல்லூரி மாணவன் தொடர்ந்த வழக்கில், உரிய சட்ட விதிகளை பின்பற்றி மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிலம்பிமங்கலத்தை அடுத்த சின்னாண்டிகுழி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடபதி.
கல்லூரி இறுதியாண்டு படித்து வரும் இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில், கடலூர் மாவட்டம் சின்னாண்டிகுழி என்ற குக்கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு மின்சார இணைப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார துறையின் பரங்கிப்பேட்டை உதவி பொறியாளர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் மனு அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குடிநீர் மற்றும் மின் இணைப்பு கிடைக்காமல் தன்னுடைய கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் தன்னுடைய வயதான பெற்றோர் மிகவும் சிரமப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுத்து முறையான குடிநீர் வசதி மற்றும் வீட்டிற்கான மின் இணைப்பை வழங்க உத்தரவிட கோரியிருந்தார்.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஆஜராகி வாதிட்டார்
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மின் இணைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும், ஆனால் மனுதாரரின் வீட்டின் அருகில் மின்கம்பம் நட்ட போது, அந்த இடம் வேறு ஒரு நபருக்கு சொந்தமானது என பிரச்சனை எழுந்தது. இது தொடர்பான வழக்கு காவல்நிலையத்தில் விசாரணையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உரிய சட்ட விதிகளை பின்பற்றி, மனுதாரரின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டார்.
மேலும் இதை செயல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications