மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லூரி.. சென்னை ஹைகோர்ட் மேஜர் உத்தரவு
சென்னை: கபாலீசுவரர் கோவில் நிதியில் இருந்து நடத்தப்படும் சுயநிதிக்கல்லூரி என்பதால், இந்து அறநிலையத்துறை சட்டப்படி, இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து அறலையத்துறையின் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், சுகைல் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற கோயில்களின் சார்பில் கல்லூரிகள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன.. உதாரணமாக அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 1970களில் இருந்து நடத்தப்படுகிறது. இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம் மாவட்டம் மேலையூரில் பூம்புகார் கல்லூரி என பல்வேறு கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பது வழக்கம்.

இந்த சூழலில் சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிதியை கொண்டு, கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது.
அந்த கல்லூரிக்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை தேர்வு செய்ய நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அறிவிப்பாணை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டது.அதில், இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சுகைல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது கல்வி நிறுவனம்தான். அது மத நிறுவனம் அல்ல. அதனால், மத அடிப்படையில் எந்த பணி நியமனங்களும் மேற்கொள்ள முடியாது. எனவே, அந்த கல்லூரியில் உள்ள பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் மனுதாரரை அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்
அதற்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், "இந்து அறநிலையத்துறை சட்டப்படி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிதியில் இருந்து கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளதால், அந்த கல்லூரி மத நிறுவனம்தான். இந்த கல்லூரியை நடத்த அரசிடம் இருந்து எந்தவித நிதியும் பெறவில்லை. இது சுயநிதி கல்லூரி என்பதால் பணி நியமனங்களில் இந்து மதத்தை சார்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும்" என வாதிப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் , ''கோவில் நிதியில் இருந்து நடத்தப்படும் சுயநிதிக்கல்லூரி என்பதால், இந்து அறநிலையத்துறை சட்டப்படி, இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்தார்.












Click it and Unblock the Notifications