இன்னொரு திமுக அமைச்சருக்கும் சிக்கல்.. ஐ.பெரியசாமி முறைகேடு வழக்கை தூசி தட்டிய சென்னை ஐகோர்ட்!
சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கை மறு ஆய்வு செய்ய தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
2006-2011 திமுக ஆட்சி காலகட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அப்போதைய முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த கணேசனுக்கு வீட்டை வழங்கியதாக 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு கடந்த மார்ச் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர்கள் ரகுநாதன், ஏ.சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குடியிருப்பு ஒதுக்கியதில் அமைச்சர் ஐ.பெரியசாமி உடந்தையாக இருந்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை எனவும், அமைச்சர் மீது வழக்கு தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும், புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தொடரப்பட்டதால் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து, கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவெடுத்துள்ளார்.
இந்த வழக்கு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கில் மறு விசாரணை நாளை தொடங்கவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது ஐகோர்ட். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் மீதான வழக்கையும் சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கையும் விசாரணைக்கு எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications