திருச்செங்கோடு, ராசிபுரம் நெடுஞ்சாலை வழித்தடத்தை மாற்ற தடை விதிக்க முடியாது.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருச்செங்கோடு, ராசிபுரம் நெடுஞ்சாலை வழித்தடத்தை மாற்றி அமைக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கன்னியாகுமரி தொழில்நகர திட்டத்தின் கிழ், அமைக்கப்பட்டு வரும் திருச்செங்கோடு, ராசிபுரம் நெடுஞ்சாலைக்கான வழித்தடத்தை மாற்றி அமைக்க கோரி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துவிஜயராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலையின் சில இடங்களில் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து முத்துவிஜயராணி மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜராகி, திருச்செங்கோடு, ராசிபுரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் 95% பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், வரும் ஜூன் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும் எனவும் தெரிவித்தார்.
இதற்காக நபார்டு வங்கி மூலம் 440 கோடி ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டதால், வழித்தடத்தை மாற்றி அமைத்தால் அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படும் எனக் குறிப்பிட்ட அவர், இத்திட்டம் தடை விதிக்கப்பட்டால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலையை கொண்டு வர முடியாத சூழல் உருவாகும் என தெரிவித்தார்.
இதை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு திருச்செங்கோடு, ராசிபுரம் நெடுஞ்சாலை வழித்தடத்தை மாற்றியமைக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications